கர்நாடகத்தில் மீண்டும் பருவமழை தீவிரம்; பட்கலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. தொடர் கனமழைக்கு பட்கலில் ஏற்பட்ட பலத்த நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியானார்கள்.

Update: 2022-08-02 20:56 GMT

மங்களூரு:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. தொடர் கனமழைக்கு பட்கலில் ஏற்பட்ட பலத்த நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியானார்கள்.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு முதலில் மழை பெய்யவில்லை. அதன்பின்னர் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. மராட்டியத்தில் பெய்த கனமழையால் வடகர்நாடகத்திலும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல் இருந்தது. பகலில் வெயில் அடித்தாலும் மாலையில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கர்நாடகத்தில் மீண்டும் கனமழை தீவிரம் எடுத்து உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பியில் கனமழை பெய்து வருகிறது. இதுதவிர மலைநாடு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவிலும் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தட்சிண கன்னடாவில் கொட்டி வரும் கனமழையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் சுப்பிரமணியா அருகே பர்வதமுகி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வீடு மண்ணுக்குள் புதைந்தது. இதில் சுருதி, ஞானஸ்ரீ என்ற 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.

4 பேர் சாவு

இந்த நிலையில் உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் தாலுகா படுசிராலி, முண்டள்ளி, கோக்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் முண்டள்ளி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீட்டிற்குள் இருந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுபற்றி அறிந்ததும் கிராம மக்கள் 4 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை.

இதுபற்றி அறிந்ததும் அங்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர். ஆனால் முண்டள்ளி கிராமத்திற்கு வரும் சாலை சேதம் அடைந்ததால் அவர்களால் உடனடியாக வர முடியவில்லை. சம்பவம் நடந்து பல மணி நேரம் கழித்து தான் பேரிடர் மீட்பு படையினர் அங்கு வந்தனர். இதன்பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் வீட்டின் மீது விழுந்த மண்ணை அகற்றும் பணி நடந்தது. ஆனாலும் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் ஆனந்தநாராயணா (வயது 48), அவரது மகள் லட்சுமி (33), மகன் ஆனந்த் (32) என்பது தெரியவந்தது.

ரப்பர் படகு மூலம் மீட்பு

மண்சரிவில் சிக்கிய பலியான மற்றொருவரின் பெயர் பிரவீன் (20). இவர் ஆனந்த நாராயணாவின் உறவினர் ஆவார். அவரது உடலை தேடும் பணி நடந்து வருகிறது. சம்பவம் குறித்து அறிந்ததும் உத்தரகன்னடா மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன், முண்டள்ளி கிராமத்திற்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

இதற்கிடையே படுசிராலி, முண்டள்ளி, கோக்கி உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த கிராமங்கள் தீவு போல காட்சி அளிக்கிறது. அந்த வீடுகளில் வசித்து வருபவர்களை மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். மேலும் பட்கல் வழியாக செல்லும் எடப்பள்ளி-பன்வல் தேசிய நெடுஞ்சாலை 66-ல் ஏராளமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.

கோவில் கோபுரம் இடிந்தது

இதுபோல பெங்களூருவிலும் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. உரமாவு சாய் லே-அவுட் பகுதியில் உள்ள வீடுகளை மீண்டும் ஒரு முறை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் பெரும்பாலான மக்கள் வீடுகளை காலி செய்யவும் தொடங்கி உள்ளனர். பொம்மனஹள்ளி அனுகிரகா லே-அவுட் பகுதியில் பெய்த கனமழைக்கு வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் நீரில் மூழ்கின. மேக்ரி சர்க்கிளில் பெய்த கனமழைக்கு சாலையில் மரம் முறிந்து விழுந்தது.

இதுபோல நகரின் பல இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் பெய்த கனமழைகளுக்கு வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மண்டியா மாவட்டம் மத்தூர், நாகமங்களா, ஸ்ரீரங்கப்பட்டணாவில் பெய்த கனமழைக்கு சாலையில் மழைநீர் ஆறு போல பெருககெடுத்து ஓடுகிறது. யாதகிரி மாவட்டம் சகாப்புரா தாலுகா இடகா என்ற கிராமத்தில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான பரமனாந்தா கோவிலின் கோபுரம் இடிந்து விழுந்தது.

முதியவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்

ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா இனாம்எல்லாபுரா என்ற கிராமத்தில் அங்கன்வாடி மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கோச்சகுண்டஹள்ளியில் மோட்டார் சைக்கிளுடன் ஒரு வாலிபர் மழைநீரில் அடித்து செல்லப்பட்டார். அந்த வாலிபரை மக்கள் உயிருடன் மீட்டனர். குனிகல்லில் மழைக்கு ரேவண்ணா என்பவரின் வீடும், அரசு கல்லூரி சுவரும் இடிந்து விழுந்தது.

ராமநகர் தாலுகா பன்னிகுப்பே-பத்ரேயன காலனி பகுதிகளை இணைக்கும் ஆற்று பாலம் மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் மழையில் சாய்ந்து விழுந்தன. ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா செட்டமாரனஹள்ளி கிராமத்திலும் மழைநீர் வீடுகளை சூழ்ந்து உள்ளது.

விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகா நாகலபுரா கிராமத்தை சேர்ந்த உன்சட்டி பொம்மப்பா (62) என்பவர், மரியம்மனஹள்ளியில் உள்ள தரைமட்ட பாலத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேலும் ஒசப்பேட்டே தாலுகாவில் தம்மசாகர் கிராமத்தில் விளைநிலத்தில் தண்ணீர் புகுந்து பருத்தி, மிளகாய் பயிர் நாசமானது. ஹம்பியில் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குடகு மாவட்டம் மடிகேரி அருகே பயஸ்வினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் பாலத்தில் சிக்கியதால் கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது.

ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகள் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்