முன்னாள் துணை முதல்-மந்திரியான லட்சுமண் சவதிக்கு பா.ஜனதா அனைத்து பதவிகளையும் கொடுத்துள்ளது. அவர் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், அவரை எம்.எல்.சி. ஆக்கி துணை முதல்-மந்திரி பதவி கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதானி தொகுதியில் சீட் கிடைக்கவில்லை என்று பா.ஜனதாவில் இருந்து லட்சுமண் சவதி விலக நினைக்கிறார். அவர் தனது முடிவு குறித்து சிந்திக்க வேண்டும்.
- எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி.
பா.ஜனதாவுக்கு நிரந்தர கொள்கை இல்லை
தற்போது இருக்கும் பா.ஜனதாவுக்கும், இதற்கு முன்பு இருந்த பா.ஜனதா கட்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. கட்சிக்காக நேர்மையாக உழைத்த எனக்கு சீட் கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் பா.ஜனதாவுக்கு நிரந்தர கொள்கை இல்லை. பா.ஜனதா தனது கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு, நேர்மையாக உழைத்தவர்களை புறக்கணித்து வருகிறது. இதுவே எனக்கு பா.ஜனதா மீதுள்ள அதிருப்திக்கு காரணமாகும்.
- லட்சுமண் சவதி, முன்னாள் துணை முதல்-மந்திரி
ஓட்டளிக்கும் முன் சிலிண்டர் விலையை பாருங்கள்
சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக உரிமையான ஓட்டுரிமையை அளிக்க இன்னும் சில நாட்களே உள்ளது. வாக்காளர்கள் ஓட்டளிக்க செல்லும் முன்பாக முதலில் தங்களது வீடுகளில் இருக்கும் கியாஸ் சிலிண்டர் விலையை முதலில் பாருங்கள். இது என்னுடைய வேண்டுகோள். அப்போது தான் நீங்கள் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கலாம். பா.ஜனதா ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது.
- டி.கே.சிவக்குமார், மாநில காங்கிரஸ் தலைவர்.
வருணா மக்கள் சித்தராமையா பக்கம்
பா.ஜனதா மேலிடத்தின் அழுத்தம் காரணமாக வருணா தொகுதியில் சோமண்ணா போட்டியிட சம்மதித்து உள்ளார். வருணா மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சித்தராமையா பக்கம் உள்ளனர். சித்தராமையாவுக்கு எதிராக யார் போட்டியிட்டாலும், அதுபற்றி கவலைப்பட போவதில்லை. உள்ஒப்பந்தம் செய்து கொண்டு சித்தராமையாவை தோற்கடிக்க சதி நடக்கிறது. யார் என்ன செய்தாலும் சித்தராமையாவை தோற்கடிக்க முடியாது.
- யதீந்திரா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.
தேவேகவுடா முடிவுக்கு கட்டுப்படுவேன்
ஹாசன் மாவட்டம் பற்றியும், அங்கு நடந்து வரும் அரசியல் நிலவரங்கள் பற்றியும் 60 ஆண்டுக்கும் மேலாக தேவேகவுடா தெரிந்து வைத்துள்ளார். ஹாசன் மாவட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் விவகாரத்தில் தேவேகவுடா எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். சித்தராமையாவுக்கும், எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வந்து விட்டால், சித்தராமையா வேறு, ரேவண்ணா வேறு. எங்களுக்கு என்று கட்சி இருக்கும் போது, நான் ஏன் காங்கிரசுக்கு செல்ல வேண்டும்.
ரேவண்ணா, முன்னாள் மந்திரி.