வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தீர்வு வேண்டும்.. குக்கி-ஸோ பழங்குடியினர் பேரணி
பேரணியின் முடிவில், அரசியல் தீர்வு கோரி உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு, சுராசந்த்பூர் துணை கமிஷனர் தருண் குமார் மூலமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இம்பால்:
மணிப்பூரில் குக்கி பழங்குடியினருக்கும் மெய்தேய் சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையைத் தொடர்ந்து குக்கி பகுதிகளில் தனி நிர்வாகம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும் குக்கி-ஸோ பழங்குடியின சமூகத்தினர் இன்று பேரணி நடத்தினர். சுராசந்த்பூர், காங்போக்பி மற்றும் தெங்நவுபால் ஆகிய மாவட்டங்களில் பேரணி நடைபெற்றது. பேரணியின்போது, அண்டை நாடான மியான்மருடன் சுதந்திர நடமாட்டத்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்கள் மியான்மருடன் 1,643 கி.மீ. எல்லையை பகிர்ந்துகொள்கின்றன. இந்தியா மற்றும் மியான்மர் எல்லையில் வசிப்பவர்கள் விசா இல்லாமல் 16 கி.மீ. தூரம் வரை பரஸ்பரம் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், இந்தியா-மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்துள்ளது.
மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்த போதைப்பொருள் வியாபாரிகளால் வன்முறை தூண்டப்பட்டதாக மணிப்பூர் அரசு குற்றம் சாட்டிய நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், சுதந்திர நடமாட்டத்தை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள குக்கி-ஸோ சமூகத்தினர், இன்றைய பேரணியின் முடிவில், அரசியல் தீர்வு கோரி உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு, சுராசந்த்பூர் துணை கமிஷனர் தருண் குமார் மூலமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
சுராசந்த்பூர் மாவட்டத்தில் பூர்வகுடி பழங்குடியினர் தலைவர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள், 'அரசியல் தீர்வு இல்லை என்றால் அமைதி இல்லை' என்று முழக்கங்கள் எழுப்பினர்.
பேரணியின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும்வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய இடங்களில் மத்திய, மாநில படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.