கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் கொலை: தொடரும் போராட்டம்
கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி டாக்டர் கடந்த மாதம் 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வலியுறுத்தியும், சில அதிகாரிகளை பணிநீக்கம்செய்ய வலியுறுத்தியும் பயிற்சி டாக்டர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணிக்கு திரும்புமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், பயிற்சி டாக்டர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. அதேவேளை, கடந்த 11ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு வர பயிற்சி டாக்டர்கள் நிபத்தனை விதித்தனர். அந்த நிபந்தனைகளை மாநில அரசு ஏற்க மறுத்ததால் அன்றைய தினம் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இதனிடையே, தொடர்ந்து 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பயிற்சி டாக்டர்களை மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று நேரில் சந்தித்தார். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தயவு செய்து பணிக்கு திரும்புங்கள் என்றும் பயிற்சி டாக்டர்களிடம் மம்தா கோரிக்கை விடுத்தார். ஆனால், போராட்டத்தை கைவிட பயிற்சி டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், பயிற்சி டாக்டர்களின் போராட்டம் தொடர்ந்து இன்றும் நீடித்து வருகிறது. கொட்டும் மழையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும், இக்குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதேபோல், குற்றச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடயங்களை அழிக்க முயன்றதாக கூறி கொல்கத்தா போலீஸ் கமிஷனர், மாநில சுகாதாரத்துறை செயலாளர், துணை செயலாளர்கள் 2 பேர் என 4 பேர் பதவி விலகக்கோரியும் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போராட்டத்தால் கொல்கத்தாவில் மருத்துவ சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.