கொல்கத்தா சம்பவம்: பத்ம விருது வென்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-08-19 01:54 GMT

புதுடெல்லி,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் குறித்து பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம், பெண்கள், மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையே காட்டுகின்றது. இந்த வழக்கில் நேரடி சிறப்பு கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

மேலும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கவும், மருத்துவமனைகள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்