கொல்கத்தா டாக்டர் கொலை: போராட்டம் நடத்தும் டாக்டர்கள் பணிக்கு திரும்ப அறிவுறுத்தல்
டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிடில் அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத்தான் கருதப்படுவார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். நாளை வரை (23-ந்தேதி) அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொல்கத்தா பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த போராட்டத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது. டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிடில் அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத்தான் கருதப்படுவார்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் பணிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.