பாடகர் கேகே மரணம் இயற்கைக்கு மாறானது இல்லை: முதல் கட்ட மருத்துவ அறிக்கையில் தகவல்
பாடகர் கேகே மரணம் இயற்கைக்கு மாறானது எனக் கூறி கொல்கத்தா பூ மார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே). தமிழ், மலையாளம், வங்காளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்பட பாடல்களை கேகே பாடியுள்ளார். மேற்கு வங்காள மாநில தலைந்கார் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கலாசார விழா ஒன்றில் கேகே பங்கேற்றிருந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிச் சென்றார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவரது மரணம் இயற்கைக்கு மாறானது எனக் கூறி கொல்கத்தா பூ மார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அவரது மரணம் இயற்கைக்கு மாறானது அல்ல என்று முதல் கட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்து இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.