பெண்ணை கொன்று பீப்பாயில் உடல் திணிப்பு

பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தில் பெண்ணை கொன்று பீப்பாயில் உடலை திணித்து வைத்திருத்த பயங்கரம் நடந்துள்ளது. ஆட்டோவில் வந்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2023-03-14 18:45 GMT

பெங்களூரு:-

பீப்பாயில் பெண் உடல்

பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் (எஸ்.எம்.வி.டி.) முக்கிய நுழைவு வாயில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு பிளாஸ்டிக் பீப்பாய் இருந்தது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே போலீசார், பீப்பாயை திறந்து பார்த்தனர். அப்போது அந்த பீப்பாயில் கவரில் சுத்தப்பட்டு ஒரு பெண்ணின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அந்த பெண்ணை வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு, அவரது உடலை கவரில் சுற்றி, அதனை பீப்பாயில் மர்மநபர்கள் திணித்து வைத்து ரெயில் நிலையம் முன்பாக வைத்து சென்றது தெரியவந்தது.

ஆட்டோவில் வந்த மர்மநபர்கள்

இதையடுத்து, ரெயில் முனையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ரெயில் முனையத்துக்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள், பீப்பாயை இறக்கி வைத்து விட்டு மின்னல் வேகத்தில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து, அந்த ஆட்டோவின் பதிவெண் மூலமாக மர்மநபர்களை தேடும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

அதே நேரத்தில் அந்த பெண்ணை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் அவரது புகைப்படத்தை மாநிலத்தின் பிற போலீஸ் நிலையங்களுக்கும், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

2-வது சம்பவம்

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்திலும் இதுபோன்று பீப்பாயில் திணிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் உடல் கைப்பற்றப்பட்டது. அதுகுறித்து யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதற்குள் தற்போது பையப்பனஹள்ளி ரெயில் முனையத்திலும் பீப்பாயில் பெண் உடல் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்