துப்பாக்கி முனையில் வங்கி மேலாளர் கடத்தல்.. 800 கி.மீ. பயணம்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

கடத்தல்காரர்கள் கேட்ட 50 லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்ய முடியாது என்று குடும்பத்தினர் கூறியதால், ரூ.5 லட்சத்திற்கு இறங்கி வந்துள்ளனர்.

Update: 2024-04-25 09:20 GMT

புதுடெல்லி:

அரியானா மாநிலம் பரிதாபாத்தில் வசித்து வருபவர் சதீஷ். இவர் டெல்லியில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு ஊழியர் ஆவார். கடந்த சனிக்கிழமை இரவு சதீஷ், துப்பாக்கி முனையில் அவரது வீட்டில் இருந்து காரில் கடத்தி செல்லப்பட்டார். உடனிருந்த அவரது மனைவி மற்றும் நண்பர் ஆகியோரின் செல்போன்களையும் பறித்துச் சென்றுவிட்டனர். 

இதுபற்றி சதீஷின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அரியானா குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சதீஷின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசிய கடத்தல்காரர்கள், சதீஷை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். அவ்வளவு தொகையை தங்களால் ஏற்பாடு செய்ய முடியாது என்று கூறியதால், ரூ.5 லட்சத்திற்கு இறங்கி வந்துள்ளனர். சதீஷின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பும்படி கூறி உள்ளனர். ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லை, ரொக்கமாக ஏற்பாடு செய்து தருகிறோம் என குடும்பத்தினர் கூறி உள்ளனர். இதனால் மேலும் இறங்கி வந்த கடத்தல்காரர்கள், முதலில் ஒரு லட்சத்தை வங்கி கணக்கில் டிரான்ஸ்பர் செய்யுங்கள், மீதி பணத்தை நாங்கள் சொல்லும் இடத்தில் வந்து கொடுங்கள் என்று கூறி போனை வைத்துள்ளனர். இந்த தொலைபேசி உரையாடலின்பொது சதீஷின் குடும்பத்தினருடன் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர். பணத்தை கொடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க வியூகம் வகுத்தனர்.

அதன்படி, கடத்தல்காரர்கள் சொன்ன இடத்திற்கு நேற்று சதீஷின் மனைவி பணத்துடன் சென்றார். அவரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு காரில் ஏறிய நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ஆனால் அந்த காரில் சதீஷ் இல்லை.

விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் பூபேந்திரா என்பதும், தன் மனைவி மற்றும் நண்பர் ரவீந்திரா ஆகியோருடன் சேர்ந்து பணத்திற்காக கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சதீஷை மதுராவுக்கு கடத்தி சென்றிருப்பதாகவும், அங்கு அவருடன் தனது நண்பர் ரவீந்திரா இருப்பதாகவும் பூபேந்திரா கூறி உள்ளார். போலீசார் அங்கு சென்றபோது ரவீந்திரா தப்பிச் சென்றுவிட்டார். சதீஷை போலீசார் மீட்டனர். பூபேந்திராவின் மனைவி கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி அமன் யாதவ் கூறியதாவது:-

பூபேந்திரா நான்கு மாதங்களுக்கு முன்பு, வங்கி மேலாளர் சதீஷின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். வேலையில்லாமல் கஷ்டப்பட்ட பூபேந்திராவுக்கு, வசதி படைத்த சதீஷை கடத்தி சென்று பணம் பறிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதன்படி, தனது மனைவி மற்றும் நண்பரின் உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார்.

பரிதாபாத் வீட்டில் இருந்து சதீஷை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது காரிலேயே கடத்தியிருக்கிறார்கள். சதீஷையே காரை ஓட்டச்செய்துள்ளனர். ரோகிணி பகுதிக்கு சென்றதும் அந்த காரை அங்கேயே விட்டுவிட்டு, அவரது கை, கால்களை கட்டி வாடகை காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சதிஷின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி காருக்கு பெட்ரோல் போட்டுள்ளனர். முதலில் இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர், பின்னர் அங்கிருந்து மதுரா என 800 கி.மீ. தொலைவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குற்றவாளிகளிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, புல்லட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் சதீஷின் மனைவி கொடுத்த பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. முக்கிய குற்றவாளிகளான கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர். ரவீந்திராவை தேடும் பணி நடைபெறுகிறது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்