லாரி திருடிய வழக்கில் கேரள வாலிபர் கைது
மங்களூருவில் லாரி திருடிய வழக்கில் கேரள வாலிபர் கைது செய்யபட்டார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கோட்டேகார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் முகமது ஷெரீப் என்பவர் தனது லாரியை நிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டலுக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் யாரோ மர்மநபர்கள் அவரது லாரியை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடி சென்றுவிட்டனர். இந்த நிலையில் ஓட்டலில் இருந்து முகமது ஷெரீப் திரும்பி வந்து பார்த்தபோது, லாரி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உல்லால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து லாரியை திருடி சென்றவரை வலைவீசி தேடி வந்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், லாரியை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் கேரள மாநிலம் மேம்பரம்பா பகுதியை சேர்ந்த அகமது ரம்ஜான் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.