கோடை விடுமுறை முடிந்து கேரளாவில் பள்ளிகள் இன்று திறப்பு

முதன் முறையாக 80 ஆயிரம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-06-02 22:47 GMT

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

கேரள பொது கல்வித்துறை மந்திரி வி.சிவன் குட்டி பள்ளிகள் திறப்பு குறித்து எர்ணாகுளத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான விழா எர்ணாகுளம் ஏளமக்கரா அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. விழாவை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த ஆண்டு முதலாம் வகுப்பில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 646 குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் 11 லட்சத்து 19 ஆயிரத்து 380 மாணவ, மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 20 லட்சத்து 30 ஆயிரத்து 91 பேரும், அரசு உதவி பெறாத பள்ளிகளில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 82 பேரும் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர். பிளஸ்-1 படிப்புகள் ஜூன் 24-ந் தேதி தொடங்கும். தற்போதும் 1, 5, 8-ம் வகுப்புகளுக்கான சேர்க்கை நடந்து வருவதால் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை முழுமையாக தெரியவரும்.

கேரளாவில் முதன் முறையாக 80 ஆயிரம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநில கல்வி, ஆய்வு, பயிற்சியகம் 2024-25-ம் ஆண்டுக்கான புதுப்பாடத் திட்டத்தின் படி தயார் செய்த தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம் 1, 3, 5, 7 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் கேரள அரசு ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

பெற்றோர்கள், மாணவர்கள் கேரள அரசின் கல்வித்துறை வலைத்தளத்திலிருந்து பாடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் 2005-ம் ஆண்டுக்கு முன் அமலில் இருந்த குறைந்தபட்ச மதிப்பெண் முறை மீண்டும் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நடைமுறைக்கு வருகிறது" என்று அவர் கூறினார்.

இதற்கிடையே இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கேரள அரசு மோட்டார் வாகன துறை பெற்றோர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி ஜி.பி.எஸ். மூலம் பள்ளிகளில் படிக்கும் தங்களின் குழந்தைகள் பயணிக்கும் பள்ளி வாகனத்தின் முழு விவரங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ளும் வகையில் 'வித்யா வாகன்' என்ற புதிய செயலியை அறிமுகம் செய்து உள்ளது. அந்த செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து பெற்றோர்கள் குழந்தைகளின் பள்ளி பயண விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று மோட்டார் வாகன துறை தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்