கேரளா: பேராசிரியர் கையை வெட்டிய வழக்கு - முக்கிய குற்றவாளிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
முக்கிய குற்றவாளி சாவத்தின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 16-ந்தேதி வரை நீட்டித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே நியூமேன் கல்லூரியில் மலையாளத்துறை பேராசிரியராக டி.ஜே.ஜோசப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி நடந்த தேர்வில் பி.காம். மலையாள பாடப்பிரிவு வினாத்தாளில் இறை தூதர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கேள்வி கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வினாத்தாளை ஜோசப் தயாரித்து இருந்தார்.
இதுதொடர்பாக அதே ஆண்டு ஜூலை 4-ந் தேதி ஒரு கும்பல் ஜோசப் கையை வெட்டியது. இதுகுறித்து தொடுபுழா போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சாவத், கடந்த 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், கடந்த 10-ந்தேதி கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாவத்தின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 16-ந்தேதி வரை நீட்டித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் சாவத்தை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.