நுபுர் சர்மா குறித்த சர்ச்சை வீடியோ வெளியீடு; காஷ்மீர் யூடியூபர் மன்னிப்பு கோரினார்!

அந்த வீடியோவில் அவர், நுபுர் சர்மாவின் உருவச்சிலையின் தலையை துண்டிப்பதை போன்று சித்தரித்து வெளியிட்டார்.;

Update: 2022-06-11 09:36 GMT

ஸ்ரீநகர்,

நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையானது.

உலகளவில் இஸ்லாமிய நாடுகள் பலவும் இதுகுறித்து இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியாவும் பதில் விளக்கம் அளித்தது. அவர்களை கைது செய்யக்கோரி நேற்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த யூடியூபர் பைசல் வானி என்பவர், டிஜிட்டல் முறையில் மீண்டும் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் வீடியோ ஒன்றை ஆன்லைனில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் அவர், பா.ஜனதாவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் ஷர்மாவின் உருவச்சிலையின் தலையை துண்டிப்பதை போன்று சித்தரித்து வெளியிட்டார். அந்த வீடியோ பெரும் வைரல் ஆனது.

இந்நிலையில், தனது செயலுக்கு மன்னிப்பு கோரி புதிய வீடியோ ஒன்றை இன்று அவர் வெளியிட்டார். பைசல் வானி தனது சேனலில் இன்று மன்னிப்பு கேட்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது:-

"நேற்று, நான் நுபுர் ஷர்மாவைப் பற்றி ஒரு கிராபிக்ஸ் வீடியோவை உருவாக்கினேன், அது இந்தியா முழுவதும் வைரலானது. இதன் காரணமாக, என்னை போன்ற ஒரு அப்பாவி இந்த சர்ச்சையில் சிக்க வேண்டியதாயிற்று.

அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்.மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இப்போது புதிய வீடியோவை பகிர்ந்துள்ளேன்.

என்னுடைய மற்ற வீடியோவைப் போல் இந்த வீடியோவையும் வைரலாக்குவீர்கள் என்று நம்புகிறேன். என் செயலுக்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்பதை இப்படித்தான் அனைவரும் அறிவார்கள்" என்று வானி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்