தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் பதில் மனு நாளை தாக்கல் செய்கிறது

காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசுக்கு எதிராக கர்நாடக அரசு நாளை(திங்கட்கிழமை) பதில் மனு தாக்கல் செய்கிறது.;

Update:2023-08-20 03:34 IST

பெங்களூரு:-

மந்திரி சபை கூட்டம்

பெங்களூரு விதான சவுதாவில் நேற்று மாலையில் முதல் -மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மாநிலத்தில் புதிதாக இந்திரா உணவகங்கள் திறப்பது தொடர்பாகவும், அங்கு உணவு பொருட்களின் விலையை உயர்த்துவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றியும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

188 உணவகங்கள்

மாநகராட்சி பகுதிகளை தவிர்த்து மாநிலம் முழுவதும் நகரசபை பகுதிகளில் புதிதாக 188 இந்திரா உணவகங்களை திறக்க மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திரா உணவகங்களுக்காக ரூ.27 கோடி ஒதுக்கவும் மந்திரிசபை அனுமதி வழங்கி உள்ளது. புதிதாக திறக்கப்பட உள்ள இந்திரா உணவகங்களில் ஒரு சாப்பாட்டின் விலை ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த விலை உயர்வு புதிதாக திறக்கப்படும் இந்திரா உணவகங்களுக்கு மட்டும் பொருந்தும். நகர பகுதிகளில் இருக்கும் ஓட்டல்களில் விநியோகிக்கப்படும் காலை உணவுகளை பொறுத்து இந்திரா உணவகங்களிலும் உணவுகள் தயார் செய்து மக்களுக்கு வழங்கப்படும். பெங்களூரு நகரில் தற்போது இருக்கும் இந்திரா உணவகங்களில் உணவுகளின் விலை உயர்த்தப்படவில்லை.

நாளை மனு தாக்கல்

காவிரி ஆற்றில் ஜூன், ஜூலை மாதத்திற்கான தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்காக கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அவரிடம் தமிழக அரசின் மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதாவது கர்நாடக அணைகளின் நிலவரம் உள்ளிட்டவை குறித்து வருகிற 21-ந் தேதி(நாளை) சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

காவிரி நீர் பிரச்சினை, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதல் -மந்திரி சித்தராமையா முடிவு செய்துள்ளார். கூடிய விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்