ஆராய்ச்சி-வளர்ச்சியில் கர்நாடகம் முதல் இடம்; மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு
ஆராய்ச்சி-வளர்ச்சியில் கர்நாடகம் முதல் இடம் என மந்திரி அஸ்வத் நாராயண் பேசி உள்ளார்.
எலெக்ட்ரானிக் சிட்டி:
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ரூ.1,000 கோடியில் கான்டிநென்டர் தொழில்நுட்ப மையத்தில் ஆராய்ச்சி-வளர்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வி மற்றும் அறிவியல், தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு அந்த மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் போக்குவரத்து முறை மாற உள்ளது. சில ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் இந்த தனியார் நிறுவனம் முக்கிய பங்காற்றும். பெங்களூருவில் ஏற்கனவே 450-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி-வளர்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனங்களை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இந்த கான்டிநேட்டர் நிறுவனம் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முக்கியமான தொழில்நுட்பத்தை உருவாக்கி கொடுக்க உள்ளது. இங்கு டிரைவர் இல்லாத காரில் நான் இந்த நிறுவன வளத்திற்குள் பயணித்தது புதிய அனுபவமாக இருந்தது.இத்தகைய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கார்கள் நமது வாழ்க்கையில் வரமாக அமையும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.