கர்நாடக தேர்தல்: தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முன்னிலை
பா.ஜ.க. வேட்பாளர் சன்னபசப்பா சிவமோகா தொகுதியில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது.
இதனிடையே சிவமோகா தொகுதியில், தேர்தல் பிரச்சாரத்தின் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூத்த பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ் வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியில் நிறுத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தற்போதைய நிலவரப்படி சிவமோகா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சன்னபசப்பா சுமார் 95 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யோகேஷ், சுமார் 67 ஆயிரம் வாக்குகளைப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதன் மூலம் பா.ஜ.க. வேட்பாளர் சன்னபசப்பா சிவமோகா தொகுதியில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.