எல்லையோர கன்னடர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்: மராட்டிய அரசுக்கு கர்நாடகம் கண்டனம்

கர்நாடக எல்லையில் உள்ள கன்னடர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ள மராட்டிய அரசுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் முறையிட முடிவு செய்துள்ளார்.

Update: 2023-03-16 18:45 GMT

பெங்களூரு:

எல்லை பிரச்சினை

கர்நாடகம்-மராட்டியம் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. கர்நாடகத்தின் பெலகாவியில் மராட்டி பேசும் மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இதனால் பெலகாவி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி இரு மாநிலங்கள் இடையே மோதலும் ஏற்பட்டு வருகிறது. இந்த எல்லை பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

ஆனாலும் இருமாநிலங்களும் எல்லை பிரச்சினை தொடர்பாக அடிக்கடி மோதி கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் எல்லை பிரச்சினை எழுந்தபோது, இருமாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து மத்தி உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியிருந்தார்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்

இந்த நிலையில், மராட்டியம் மீண்டும் தனது அடாவடியை தொடங்கி உள்ளது. அதாவது, கர்நாடக எல்லைக்குட்பட்ட பெலகாவியில் உள்ள 865 கிராமங்களில் வசிக்கும் மராத்தி சமூக மக்களுக்கு ரூ.54 கோடி செலவில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த மராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது கர்நாடக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மராட்டிய அரசின் இந்த அடாவடி தனமான செயலுக்கு கர்நாடக அரசியல் கட்சி தலைவர்களும், கன்னட அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மராட்டிய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மராட்டிய அரசின் செயலுக்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கருத்து கூறக்கூடாது

கர்நாடக எல்லையில் வசிக்கும் கன்னட மக்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மராட்டிய அரசு அறிவித்துள்ளது. இதை கண்டிக்கிறேன். இது தவறு. உள்துறை மந்திரி அமித்ஷா இரு மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து பேசினார். அப்போது அவர், சுப்ரீம் கோா்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார். தூண்டிவிடும் வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இப்போது அதை மராட்டிய மாநில அரசு மீறியுள்ளது. மராட்டிய அரசு உடனே அந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரம் உள்துறை மந்திரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இத்தகைய திட்டங்களை எங்களாலும் அறிவிக்க முடியும். மராட்டிய எல்லையில் உள்ள பல்வேறு தாலுகாக்கள், கிராம பஞ்சாயத்துகள் இங்கு தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், அதனால் தங்களை கர்நாடகத்தில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

சம்பள உயர்வு

சூழ்நிலை இவ்வாறு இருக்கும்போது, மராட்டியம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் 15 சதவீதம் உயர்த்தப்படும். இந்த இரு சம்பள உயர்வுக்கான உத்தரவு இன்று (நேற்று) பிறப்பிக்கப்படும்.

கோடை காலத்தில் ஆங்காங்கே காட்டுத்தீ சம்பவங்கள் நடக்கின்றன. காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தற்போது வரை ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதில் வனத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பெங்களூரு- மைசூரு விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை பொதுமக்கள் எதிர்க்கவில்லை.

விரைவுச்சாலை

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தான் அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் நடந்துகொள்ளும் விதம் நல்லது அல்ல. விரைவுச்சாலை அமைக்கும் முன்பே சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சர்வீஸ் ரோட்டில் சுங்க கட்டணம் வசூலிக்கவில்லை. இந்த விஷயத்தில் தேவையின்றி அரசியல் செய்யப்படுகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்