கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய விவகாரத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் நேற்று பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-02-29 06:38 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் மாநிலங்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் ஹூசேன் வெற்றிபெற்றதாக அறிவிப்பு வெளியானபோது, சையத் நசீர் ஹூசேன் ஜிந்தாபாத் என அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். அதேவேளையில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழக்கம் எழுப்பியதாக கன்னட தனியார் சேனல்களில் செய்திகள் வெளியாகின.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியதற்கு கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா, முன்னாள் முதல்-மந்திரி மஜத தலைவருமான குமாரசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் நேற்று பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை கர்நாடக சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா உள்ளிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

உடனடியான முதல்-மந்திரி சித்தராமையா எழுந்து அவர்களது கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நான் உங்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அரசு நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளது. சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட குரல் பதிவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். அதில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து கர்நாடக அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்