தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என கோரி-மண்டியாவில் கன்னட அமைப்புகள் போராட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என கோரி மண்டியாவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்கள், கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்காத கன்னட திரையுலகினருக்கு போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டியா:-
தமிழகத்திற்கு நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 4 ஆயிரத்திற்கு அதிகமாக நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை கர்நாடக விவசாயிகளிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள மண்டியா விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ெஜயகர்நாடகா மற்றும் கன்னட சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் மண்டியா நகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மண்டியா நகரில் உள்ள ஜெயசாமராஜேந்திர உடையார் சர்க்கிளை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசை கண்டித்தும், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் கூறுகையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடமாட்டோம் என்று மாநில அரசு உறுதி அளித்தது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதும், ரகசியமாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நீரை திறந்துவிட்டுள்ளது.
இது மிகவும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாக்கள் வறட்சியின் பிடியில் உள்ளது. இந்த நேரத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டிருப்பதால் வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட கூடும்.
திரையுலகினருக்கு எச்சரிக்கை
இதற்கு தீர்வு காணவேண்டிய மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. காவிரி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும். அதேபோல் காவிரி நதிநீர் விவகாரத்திற்கு கர்நாடகத்திற்கு ஆதரவாக கன்னட திரையுலகினர் குரல் கொடுக்காமல் உள்ளனர்.
விரைவில் அவர்கள் போராட்டம் நடத்தவேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து பஸ்சில் ஏற்றிக்கொண்டு ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி தாய் சிலைக்கு மாலை
இதேபோல கர்நாடக விவசாயிகள் சார்பில் மண்டியாவில் உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிள் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் சில விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.நகர் பகுதிகளில் மண்டியா ஸ்ரீ நால்வடி கிருஷ்ணராஜ உடையார் அறக்கட்டளை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
முன்னதாக அவர்கள் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் அலுவலகத்தில் உள்ள காவிரி தாய் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக சென்ற அவர்கள் பெங்களூரு-மைசூரு சாலையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்படி எங்கள் போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.