நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை - முன்பதிவு செய்யப்பட்ட ஹெலிகாப்டர்

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2024-09-26 23:28 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நடிகர் தர்ஷன் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பெங்களூரு செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த 23-ந் தேதி இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோர்ட்டு இன்று தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கினால், பல்லாரி சிறையில் உள்ள தர்ஷனை பெங்களூருவுக்கு அழைத்து வர அவரது மனைவி விஜயலட்சுமி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அவர் பெங்களூருவை சேர்ந்த தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் ஒன்றில் ஹெலிகாப்டர் முன் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விசாரணை முடிந்த பின்னர்தான் நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது அவர் மீண்டும் சிறை வாசம் அனுபவிக்க வேண்டுமா? என்பது தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்