பா.ஜ.க.வில் சேருங்கள்; அனைத்து பாவங்களும், குற்றங்களும் கழுவப்படும்: ஆம் ஆத்மி காட்டம்

ரூ.ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளை கொண்ட நபர்கள் பா.ஜ.க.வில் இணைந்து உள்ளனர் என ஆம் ஆத்மியின் உத்தர பிரதேச தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Update: 2023-07-03 00:08 GMT

பிலிபித்,

மராட்டியத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அவருடைய சிவசேனா கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து உள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்து, தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் நேற்று இணைந்தது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அஜித்பவார், சிவசேனா - பா.ஜ.க. கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்று கொண்டார் . அஜித் பவாருக்கும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.

ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரசுக்கு அமலாக்க துறையிடம் இருந்து மறைமுக நெருக்கடி கொடுக்கப்பட்டு உள்ளது என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார். எனினும், நடந்தது பற்றி கவலை இல்லை என்றும் கட்சியை வலுப்படுத்த மீண்டும் பணியாற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, வருகிற 6-ந்தேதி அனைத்து தலைவர்களுடனான கூட்டம் ஒன்றை நடத்த அவர் முடிவு செய்து உள்ளார். அதில், பல முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆம் ஆத்மியின் உத்தர பிரதேச தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, ஊழக்கு மிக பெரிய தீனி அளிப்பவராக பிரதமர் மோடி உள்ளார். 2 நாட்களுக்கு முன்பு அவர், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றிய உத்தரவாதம் வழங்கினார்.

ஆனால், நீர்ப்பாசன ஊழலில் ஈடுபட்டவர்கள், அஜித் பவார் போன்ற ரூ.ஆயிரக்கணக்கான கோடி ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் மராட்டிய துணை முதல்-மந்திரியாக்கப்பட்டு உள்ளனர்.

ஊழலுக்கு இடமில்லை என பிரதமர் மோடி கூறினார். ஆனால், ஊழல் செய்தவர்கள் தற்போது அந்த கட்சியில் உள்ளனர். பா.ஜ.க.வில் சேருங்கள். உங்களது அனைத்து பாவங்களும், குற்றங்களும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளும் கழுவப்பட்டு விடும் என்று அவர் கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்