வட கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் ஜனார்த்தனரெட்டி

கே.ஆர்.பி.பி. கட்சி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதால் வட கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஜனார்த்தனரெட்டி தலைவலியாக உருவெடுத்துள்ளார்.

Update: 2023-02-05 20:16 GMT

பெங்களூரு:-

போக்குவரத்து மந்திரி

கனிமவள தொழில் அதிபரும், முன்னாள் மந்திரியுமான ஜனார்த்தனரெட்டியை பா.ஜனதாவில் சேர்த்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர் கல்யாண ராஜிய பிரகதி பக்ச (கே.ஆர்.பி.பி.) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். பல்லாரி, கொப்பல் உள்ளிட்ட வட கர்நாடகத்தில் உள்ள சில தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி முடிவு செய்துள்ளது. பா.ஜனதாவில் இருந்தபோது, ரெட்டி சகோதரர்கள் (ஜனார்த்தனரெட்டி, கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி) செல்வாக்கு படைத்தவர்களாக திகழ்ந்தனர். இதில் ஜனார்த்தனரெட்டி தவிர மற்ற மூவரும் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். ஸ்ரீராமுலு போக்குவரத்து மந்திரியாக பணியாற்றி வருகிறார்.

ஆனால் ஜனார்த்தனரெட்டி தொடங்கியுள்ள கட்சியில் அவரது சகோதரர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகியோர் சேரவில்லை, அவரது நெருங்கிய நண்பர் ஸ்ரீராமுலுவும் இணைய மறுத்துவிட்டார். இதையடுத்து பல்லாரி தொகுதியில் தனது சகோதரர் சோமசேகர ரெட்டிக்கு எதிராக ஜனார்த்தனரெட்டி தனது மனைவி அருணா லட்சுமியை நிறுத்த முடிவு செய்துள்ளார்.

பா.ஜனதாவுக்கு பாதிப்பு

ஜனார்த்தனரெட்டியின் கட்சியால் வட கர்நாடகத்தில் குறிப்பாக பல்லாரி மற்றும் அதனை ஒட்டியுள்ள சில மாவட்டங்களில் பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அவருக்கு பா.ஜனதா வேறு விதங்களில் இடையூறு கொடுக்க முயற்சி மேற்கொள்ளும் என்று சொல்கிறார்கள். ஆனால் பா.ஜனதா தனக்கு எத்தகைய தொந்தரவு கொடுத்தாலும், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க போவது இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து சோமசேகரரெட்டி எம்.எல்.ஏ. கூறுகையில், 'ஜனார்த்தனரெட்டி சிறையில் இருந்தபோது அவருக்காக நான் பல தியாகங்களை செய்தேன். 63 நாட்கள் சிறையில் இருந்தேன். ஆனால் எனக்கு எதிராக அவரது மனைவியை நிறுத்துவதாக கூறியுள்ளார். நான் செய்த உதவிகளை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. நான் செய்த உதவிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாக அவரது மனைவி மற்றும் மகள் கூறினர். ஆனால் எனக்கு எதிராக போட்டியிடுகிறார்கள். அவர்கள் போட்டியிடட்டும். நான் செய்த பணிகள் மக்களுக்கு தெரியும். அவர்கள் எனக்கு ஆசி வழங்குவார்கள். நான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என்றார்.

நிபந்தனை ஜாமீன்

சட்டவிரோத கனிமள முறைகேடு புகார்களில் ஜனார்த்தனரெட்டி கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 5 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார். அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவர், பல்லாரியில் நுழைய கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்