பா.ஜனதாவினரே ஊழலுக்கான ஆதாரங்களை வழங்கினார்கள்

பா.ஜனதாவினரே ஊழலுக்கான ஆதாரங்களை வழங்கினார்கள் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-07 22:42 GMT

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்வதுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை போன்ற தோற்ற உடைய ஒருவர் மீது ரூபாய் நோட்டு மழை பொழிவது போன்ற வீடியோ விளம்பரத்தை காங்கிரஸ் வெளியிட்டது.

இதற்காக விளக்கம் அளிக்கும்படி டி.கே.சிவக்குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் டிகே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பா.ஜனதாவின் ஊழலுக்கான விலை பட்டியலை கொடுத்து நான் இல்லை. பா.ஜனதாவினர் தான் ஊழலுக்கான விலை பட்டியலை கொடுத்தனர். பா.ஜனதா கட்சியை சேர்ந்த யத்னால் எம்.எல்.ஏ., கூளிகட்டி சேகர், எம்.எல்.சி.யான விஸ்வநாத் ஆதாரங்களை வழங்கினார்கள். முதல்-மந்திரி பதவிக்கு எத்தனை கோடி கொடுத்தனர், மந்திரி பதவிக்கு எத்தனை கோடி கொடுத்தனர், மடாதிபதிகளிடம் இருந்து எவ்வளவு கமிஷன் பெற்றனர் என்பது பற்றி கூறினார்கள்.

தொலைகாட்சி சேனல்களிலும் பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழலுக்கான விலை பட்டியல் வெளியாகி இருந்தது. தொலைகாட்சி சேனல்களில் வெளியான விளம்பரத்திற்காக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. அதற்கு உரிய பதில் அளிக்கப்படும். பா.ஜனதா 40 சதவீத கமிஷன் பெற்றதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்