3 ஆண்டுகள் ஆகியும் போலீஸ் குடியிருப்பு கட்டப்படாத அவலம்

ஆண்டர்சன்பேட்டையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் போலீஸ் குடியிருப்பு கட்டப்படவில்லை. இதனால் அந்த இடம் முட்புதர்கள் நிறைந்து காடுபோல் காட்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.

Update: 2023-09-09 18:45 GMT

கோலார் தங்கவயல்

போலீஸ் குடியிருப்பு

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை பகுதியில் போலீஸ் குடியிருப்புகள் இருந்தன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளை இடித்து விட்டு ரூ.6 கோடி செலவில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்று போலீஸ் துறை அறிவித்தது.

அதன் பின்னர் போலீஸ் குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. வீடுகள் இடிக்கப்பட்ட பின் கொரோனா பரவல் தொடங்கியது. இதனால் போலீஸ் குடியிருப்பு கட்டும் பணி நின்று போனது.

அதன் பின்னர் கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்தது. ஆனால் போலீஸ் குடியிருப்பு கட்டும்பணி தொடங்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகள் ஆகியும் போலீசார் குடியிருப்பு கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்பட வில்லை.

இதனால், இந்த இடத்தை சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன் அந்த இடத்தை இளைஞர்கள் சூதாட்டம் விளையாட பயன்படுத்தி வருகிறார்கள்.

பொதுமக்கள் கோரிக்கை

காலியாக உள்ள அந்த இடத்தில் முட்புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.

அந்த இடத்தில் மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகளை பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் கடித்து வருவதாகவும், அவ்வாறாக இதுவரை 40-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் செத்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

அந்த இடத்தில் போலீஸ் குடியிருப்புகளை கட்ட போலீஸ் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்