தக்காளி காய்ச்சல் பாதிப்பு என அழைப்பது சரியா? தவறா? நிபுணர்கள் பதில்

கை, கால் மற்றும் வாயில் ஏற்படும் நோய்க்கு தக்காளி காய்ச்சல் என தவறாக பெயரிட்டு அழைக்கின்றனர் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Update: 2022-08-21 12:45 GMT



புதுடெல்லி,



இந்தியாவில் 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகளால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர். எனினும், உருமாற்றம் அடைந்து வரும் கொரோனா வைரசானது பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றன. மக்களை அச்சுறுத்தியும் வருகின்றன.

இந்த தொற்றால், வயது வேற்றுமையின்றி அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், எபோலா, நிபா உள்ளிட்ட வைரசால் ஏற்பட கூடிய பருவ கால பாதிப்புகளும் மிரட்டி வருகின்றன. சமீப நாட்களாக, குரங்கம்மை காய்ச்சல் உலக நாடுகளில் பரவியுள்ளன.

இந்த சூழலில், சிறுவர்களை இலக்காக கொண்டு தாக்கம் ஏற்படுத்த கூடிய வைரசின் பாதிப்புகளும் இந்தியாவில் ஏற்பட்டு வருகின்றன. அவர்கள் கை, கால்கள் போன்ற உறுப்புகளில் தோல் பாதிப்புகளை ஏற்படுத்தி துயரடைய செய்கின்றன.

இதுபற்றி, இந்திய மருத்துவ கூட்டமைப்பின் கொரோனாவுக்கான தேசிய பணி குழு துணை தலைவரான மருத்துவர் ராஜீவ் ஜெயதேவன் கூறும்போது, 10 வயதுக்கு உட்பட்ட இளம் குழந்தைகளின் கை, கால் மற்றும் வாயில் நோய் ஏற்படுகிறது.

வைரசால் ஏற்பட கூடிய இந்த நோயை தக்காளி காய்ச்சல் என தவறாக வழிநடத்தும் வகையில் பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த நோயானது காக்ஸ்சேக்கி வைரசால் ஏற்படுகிறது.




 

இதனால், தோலில் செம்புள்ளிகள் (சிவப்பு நிற புள்ளிகள்) தோன்றுகின்றன. அதனால், இதனை தக்காளி காய்ச்சல் என சிலர் அழைக்கின்றனர். அதன்பின் இந்த பெயரே பிரபலமடைந்து விட்டது. ஆனால், இதுபோன்ற பெயர்களை பயன்படுத்துவது தவறாக வழிநடத்தும். தக்காளியால் இந்த வியாதி வருகிறது என தவறுதலாக பலர் நம்புவதற்கு அடிப்படையாக அமைந்து விடுகிறது.

இதுபற்றி சர் கங்காராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரான மருத்துவர் திரேன் குப்தா கூறும்போது, கேரளாவில் சமீப காலங்களாக கொரோனாவின் தீவிர பாதிப்புகளில் இருந்து மக்கள் மெல்ல மீண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கேரளாவில் சில செய்தி நிறுவனங்களில் சமீப நாட்களாக, தக்காளி காய்ச்சல் என்ற பெயரில் புதுவகை வியாதி பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. இதனால், புது வகை அச்சம் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த நோய் பற்றிய உண்மை நிலைமையை பற்றி அறிவது முக்கியம் என அவர் கூறியுள்ளார்.

இந்த நோய் ஏற்பட்டதும், கூடுதலாக மூட்டு வலிகள் மற்றும் தீவிர காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். வயது, நோயெதிர்ப்பு சக்தி மற்றும் வைரசின் வகைகள் ஆகியவற்றால் அறிகுறிகளானது வேறுபட கூடும். பொதுவாக, இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என அவர் கூறுகிறார்.

இதுபற்றி டாக்டர் ராஜீவ் கூறும்போது, இந்த தொற்று ஏற்பட்ட மனிதரில் இருந்து மற்றொரு நபருக்கு எளிதில் பரவ கூடும். சாதாரண ஜலதோஷம் போன்று பரவும். கைகளை கழுவுதல், சுகாதார நடவடிக்கைகள் ஆகியவை அவற்றை தடுக்க உதவும்.

துணைநிலை சிகிச்சையே இதற்கு தேவைப்படும். சிக்கலான நிலை ஏற்படுவது என்பது அரிது. அதனால், கவலைப்பட வேண்டிய தேவையில்லை என தடுப்பு முறைகள் பற்றி அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்