பா.ஜ.க.வுக்கு செல்கிறாரா காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி?
மணீஷ் திவாரி பா.ஜ.க.வில் இணைந்து லூதியானா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, பஞ்சாப் மாநிலம் அனந்த்பூர் சாஹிப் மக்களவை தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும், பஞ்சாப்பின் லூதியானா மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அண்மையில் மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மணீஷ் திவாரியும் பா.ஜ.க.வில் சேரப்போவதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த தகவலை மணீஷ் திவாரியின் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "மணீஷ் திவாரி பா.ஜ.க.வில் இணையப்போவதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது. மணீஷ் திவாரி தனது தொகுதியில் இருக்கிறார். அங்கு வளர்ச்சிப் பணிகளை கவனித்து வருகிறார். நேற்று இரவு கூட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களது இல்லத்திலேயே தங்கியிருந்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.