'கெஜ்ரிவாலின் பேச்சு முரணாக உள்ளது' - சுவாதி மாலிவால் விமர்சனம்
கெஜ்ரிவாலின் பேச்சு முரணாக உள்ளது என சுவாதி மாலிவால் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால். இவர் கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி மாலிவால் அளித்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை 8 முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைக்க பா.ஜ.க. தீட்டிய சதித்திட்டத்தின் முகமாக சுவாதி மாலிவால் உள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. மேலும் இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுவாதி மாலிவால் வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு, நீதி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலின் பேச்சு முரணாக உள்ளது என சுவாதி மாலிவால் விமர்சித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் மீது அவரது தொண்டர் படையை ஏவிய பிறகு, என்னை பா.ஜ.க. ஏஜெண்ட் என்று அழைத்த பிறகு, என்னை பற்றி தவறாக எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை பகிர்ந்த பிறகு, பாதிக்கப்பட்ட என்னை அவமானப்படுத்திய பிறகு, குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்திய பிறகு இறுதியாக நியாயமான விசாரணை வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறுகிறார். முரண்பாடு ஆயிரம் முறை மரணித்துவிட்டது. இந்த பேச்சு எனக்கு சுத்தமாக புரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.