அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ராமஜென்ம பூமி வழக்கு தொடர்ந்தவருக்கும் அழைப்பு
அயோத்தி ராம பாதை அருகே உள்ள கோட்டியா பஞ்சிடோலாவில் உள்ள அவரது வீட்டுக்கு ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் சென்று இந்த அழைப்பிதழை வழங்கினர்.
அயோத்தி,
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நீண்ட காலமாக விசாரணை நடந்து வந்த ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கும் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அயோத்தி ராம பாதை அருகே உள்ள கோட்டியா பஞ்சிடோலாவில் உள்ள அவரது வீட்டுக்கு ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் சென்று இந்த அழைப்பிதழை வழங்கினர்.
இதை இக்பால் அன்சாரியின் மகள் ஷாமா பர்வீன் தெரிவித்தார். ' அப்பாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது' என்று அவர் கூறினார். முன்னதாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை முஸ்லிம் மக்கள் மதிப்பதாக கடந்த மாதம் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.