இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி பதவி விலக முடிவு.. புதிய அதிகாரி நியமனம்

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஜெயேஷ் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.;

Update:2023-12-12 15:20 IST

பெங்களூரு:

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்து வரும் நிலஞ்சன் ராய் ராஜினாமா செய்ய உள்ளார். 2018ம் ஆண்டில் இருந்து இந்த உயர் பதவியில் இருக்கும் அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலக முடிவு செயதுள்ளார்.

இதனால் அடுத்த நிதி அதிகாரியை தேர்வு செய்வதற்காக இயக்குனர் குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, நிலஞ்சன் ராய்க்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்ததுடன், அவர் தலைமை நிதி அதிகாரியாக இருந்த காலத்தில் நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டினர். இந்த ஆலோசனையின் முடிவில், நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாகவும், முக்கிய நிர்வாக பணியாளராகவும் ஜெயேஷ் சங்ரஜ்கா நியமிக்கப்பட்டார்.

இவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். அதுவரை, அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நிலஞ்சன் பதவியில் நீடிப்பார்.

ஜெயேஷ், 18 ஆண்டுகளுக்கும் மேலாக இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். பல்வேறு தலைமை பொறுப்புகளை வகித்த இவர், தற்போது நிர்வாக துணைத் தலைவராகவும், துணை தலைமை நிதி அதிகாரியாகவும் உள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் வாய்ந்த இவர் ஒரு ஆடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்