22,850 அடி உயரத்தில் யோகா; இந்தோ-திபெத் எல்லை போலீசார் சாதனை

இந்தோ-திபெத் எல்லை போலீசார் 22,850 அடி உயரத்தில் பனி படர்ந்த சூழலில் யோகா செய்து சாதனை படைத்து உள்ளனர்.

Update: 2022-06-06 11:22 GMT



புதுடெல்லி,



உத்தரகாண்டின் இமயமலை பகுதியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படையை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 14 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த வாரம் பயணம் மேற்கொண்டது. அவர்கள் அபி கமின் மலையுச்சிக்கு சென்றனர்.

அதுபோன்று மலை தொடருக்கு செல்லும் வழியில் பனி படர்ந்திருந்த ஓரிடத்தில் மிக அதிக உயரத்தில் அவர்கள் யோகா பயிற்சி செய்தனர். 22,850 அடி உயரத்தில் இருந்தபடி கடந்த 1ந்தேதி அவர்கள் 20 நிமிடம் வரை யோகாவில் ஈடுபட்டனர்.

இதுபற்றி இந்தோ-திபெத் எல்லை படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்கு சென்று இந்தோ-திபெத் எல்லை படையின் மலையேற்ற வீரர்கள் யோகா பயிற்சி செய்துள்ளனர். இது வீரர்களின் ஓர் அரிய முயற்சியாகும்.

இதற்கு முன்பு இவ்வளவு உயரத்திற்கு சென்று யோகா பயிற்சியை மேற்கொண்டு யாரையும் பார்த்தது இல்லை. இது தனித்துவம் வாய்ந்த சாதனை என தெரிவித்து உள்ளது.

மனித இனத்திற்கான யோகா என சர்வதேச யோகா தினத்திற்கான நடப்பு ஆண்டு கருப்பொருள் ஆக கூறப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு யோகாசனங்களை செய்து மக்கள் கட்டுடலுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற செய்தியை கூறுவதற்காக மிக அதிக உயரத்தில் அவர்கள் யோகா பயிற்சியை செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்