உத்தரகாண்டில் சுரங்க தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து ஏற்படும் இடையூறு.. களத்தில் இறங்கும் ராணுவம்
சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களுக்கு ஆக்சிஜன், உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தர்காசி,
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியதாக தெரிவிக்கப்பட்டது. விரைவிலேயே தொழிலாளர்கள் அனைவரும் வெளியே கொண்டுவரப்படுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்த நிலையில், 'மிக அருகில்... ஆனாலும் வெகு தொலைவில்' என்பதைப் போல மீட்பு பணி நீடித்துக்கொண்டே செல்கிறது.
இதற்கு, துளையிடும் அமெரிக்க எந்திரத்தில் தொடர்ந்து ஏற்படும் பிரச்சினை, இடிபாடுகளுக்கு இடையில் இருந்து எதிர்ப்படும் இடையூறுகள் போன்றவை காரணமாக அமைந்துள்ளன. துளையிடும் எந்திரம் பழுதடைந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டதால், மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய நிலை மீட்பு படையினருக்கு ஏற்பட்டுள்ளது.
57 மீட்டர் தூரமுள்ள இடிபாடு பகுதியில் இன்னும் 10 அல்லது 12 மீட்டர் தூரமே துளையிட வேண்டியுள்ளதால், ஆட்கள் மூலம் அந்த பணியை மேற்கொள்ள ஆலோசிப்பதாகவும், ஆனால் அதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்றும் அதிகாரிகள் நேற்று கூறினர். உத்தரகாண்ட் சுரங்க விபத்து நடந்து 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தொடரும் பின்னடைவுகளால் இதோ அதோ என்று மீட்பு பணி நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால், குழாய் மூலம் அனுப்பப்படும் உணவு, அத்தியாவசியப் பொருட்களால், சிக்கியுள்ள தொழிலாளர்கள் நலமாக இருப்பதும், அவர்கள் வாக்கி-டாக்கிகள் மூலம் அவ்வப்போது தமது குடும்பத்தினர், மீட்பு படையினர் மற்றும் டாக்டர்களுடன் பேசிவருவதுமே ஆறுதலாக அமைந்திருக்கின்றன.
மீட்பு பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய ராணுவமும் மீட்பு பணியில் இறங்க உள்ளது. இயந்திரம் இல்லாமல் மனிதசக்தி மூலமாக மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளனர்.இந்திய ராணுவத்தின் என்ஜினியர் குழுவான மெட்ராஸ் சப்பேர்ஸ் என்ற பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்கள், நிகழ்விடத்திற்கு வந்துள்ளனர்.சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கி இதுவரை 360 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளது. மீட்பு பணிகள் சவாலாக உள்ளதால், தொழிலாளர்களை மீட்க இன்னும் சில நாட்கள் ஆகக் கூடும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களுக்கு விளக்கு, ஆக்சிஜன், உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.