2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - மத்திய மந்திரி ஆர்.கே.சிங்

நாட்டின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தும் பணிகள் அதிவேகத்தில் நடந்து வருவதாகவும், இதனால் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் மத்திய மந்திரி ஆர்.கே.சிங் உறுதிபட தெரிவித்தார்.;

Update:2023-08-04 22:27 IST

 

மத்திய மந்திரி ஆர்.கே.சிங்

மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை மந்திரி ஆர்.கே.சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், நாட்டின் உள்கட்டமைப்பு துறைகளில் நடந்து வரும் பணிகளை பட்டியலிட்டு, நாடு வேகமாக முன்னேறுவதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாட்டின் உள்கட்டமைப்பு துறைகளை நவீனப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நாம் இப்போது நம்மை வளர்ந்த நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். விரைவில் நாம் வளர்ந்த நாடாக இருப்போம். பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும்.

வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்

ேதசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த 2014-ம் ஆண்டில் இருந்து நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் வேகம் உள்ளது. இதற்கான மூலதன செலவினம் 3 மடங்கு அதிகரித்தது. 2019-ம் ஆண்டு முதல் இது சுமார் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டின் உள்கட்டமைப்புத்துறை வேகமாக நவீன மயமாகுவதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்று வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள். என்ஜின் இல்லாத இந்த ரெயில்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை.

இந்த ஆண்டுக்குள் 150 ரெயில் சேவைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் மேலும் 800 ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

மூலதன செலவினம் அதிகரிப்பு

அரசின் மூலதன செலவினம் நடப்பு 2023-24-ம் நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.7.5 லட்சம் கோடியாக இருந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை பொறுத்தவரை ஆண்டுக்கு 50 ஜிகாவாட் உற்பத்திக்கு இந்தியா திட்டமிட்டு உள்ளது. இது 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட்டாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு நிதியாண்டுக்குள் காஷ்மீர் பள்ளத்தாக்கு ரெயில் நெட்வொர்க்கில் இணைக்கப்படும். உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதை திட்டம் இந்த ஆண்டுக்குள் நிறைவடைந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் இணையும். நடப்பு நிதியாண்டுக்குள் அகல ரெயில் பாதைகள் அனைத்தும் 100 சதவீதம் மின் மயமாக்கப்படும். தற்போது நாட்டின் அதிவிரைவுச்சாலையின் மொத்த நீளம் 3,106 கி.மீ. ஆக உள்ளது. இது கடந்த 2014-ல் 353 கி.மீ.யாக இருந்தது.

விமான போக்குவரத்து

மிகப்பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. 2014-ம் ஆண்டு 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 148 ஆக இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. இதைப்போல விமானங்களின் எண்ணிக்கையும் 395-ல் இருந்து 729 ஆக உயர்ந்துள்ளன. உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் 6.1 கோடியில் (2013-14) இருந்து 13.6 கோடி என்ற நிலையை எட்டியுள்ளது. சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் 4.3 கோடியில் இருந்து 5.4 கோடியாக அதிகரித்து இருக்கிறது. உடான் திட்டத்தில் 479 வழித்தடங்களில் தற்போது விமானங்கள் இயக்கப்படுகின்றன.

செல்போன் பயனாளிகளின் எண்ணிக்கையும் 90.45 கோடியில் (2014) இருந்து 114.4 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

இவ்வாறு மத்திய மந்திரி ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்