வாழ்க்கை தரத்தை மாற்றும் திட்டங்களின் புரட்சியின் மத்தியில் இந்தியா-வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

மத்திய அரசின் வாழ்க்கை தரத்தை மாற்றும் திட்டங்களின் புரட்சியின் மத்தியில் இந்தியா உள்ளதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Update: 2022-06-11 22:05 GMT

பெங்களூரு: மத்திய அரசின் வாழ்க்கை தரத்தை மாற்றும் திட்டங்களின் புரட்சியின் மத்தியில் இந்தியா உள்ளதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

புரட்சியின் மத்தியில் ...

பெங்களூருவில் இந்திய அறிவியல் கழகம் உள்ளது. அங்கு தற்சார்பு இந்தியா திட்டம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இன்று ஒரு வேறுபட்ட இந்தியாவை நாம் பார்க்கிறோம். வங்கி, மின்சாரம், வீட்டு வசதி, குடிநீர், சமையல் எரிவாயு இணைப்பு, பொது சுகாதாரம் போன்றவை தொடர்பான திட்டங்களின் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் பயன் கடைசி நிலையில் உள்ள பயனாளர்களையும் சென்றடைந்து உள்ளது. வாழ்க்கை தரம் மேம்பாடு அடைவதில் இந்தியா வியத்தகு புரட்சியை நோக்கி பயணிக்கிறது. அதாவது மத்திய அரசின் வாழ்க்கை தரத்தை மாற்றும் திட்டங்களின் புரட்சியின் மத்தியில் இந்தியா இருக்கிறது. அதே போல் இந்த புரட்சி ஜனநாயக ரீதியாகவும் ஏற்படுகிறது.

தற்சார்பு

தற்சார்பு இந்தியா திட்டத்தை செயல்படுத்தி இருப்பதால் திறன் மேம்பாடு, தேவை, தொழில்முனைவோர் மற்றும் தொழில்களை அறிவு கூர்மையாக நடத்துவதில் இந்தியா மேம்பட்டுள்ளது. நல்ல திறன்மிக்க இந்தியா, ஆரோக்கியம், தன்னிறைவு மற்றும் சுயநம்பிக்கை ஆகியவற்றை ஏற்படுத்துவது தான் தற்சார்பு இந்தியாவின் நோக்கம் ஆகும்.

தற்சார்பு இந்தியா என்பது, அதிக சுவர்களை கட்டுவது அல்ல, உலக நாடுகளுடன் போட்டி போடுவது தான். தற்சார்பு இந்தியா திட்டம் மக்களை மையப்படுத்தி தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் நாட்டின் வருவாயில் பெரும் பகுதி மக்களிடம் இருந்து தான் வருகிறது. மனித வளத்தின் தரத்தை உயர்த்துவது தான் மத்திய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இது நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான விஷயம் ஆகும்.

புதிய இந்தியா

உலக அரங்கில் புதிய இந்தியாவுக்கு தனி இடம் கிடைத்துள்ளது. நமது உறுதியான இலக்குகள் சரியான முறையில் எட்டப்படுவதால் தான் சாதிக்க முடிகிறது. உள்கட்டமைப்பு, நகரமயமாதல், சீர்மிகு நகரங்களை உருவாக்குதல், டிஜிட்டல் கொள்கைகள், புதுமைகளை அறிமுகம் செய்தல் போன்றவற்றால் தான் பல்வேறு துறைகளில் சாதித்துள்ளோம்.

இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்