தண்டனை காலம் முடிந்தும் பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்திய கைதிகளை விடுவிக்க கோரிக்கை
தண்டனை காலம் முடிந்தும் பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்திய கைதிகளை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் இரு நாடுகளும் தங்கள் எல்லைகளுக்குள் அத்துமீறி நுழைபவர்களை கைது செய்து சிறைப்படுத்தி வருகின்றன. இதில் பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் அடங்குவர்.
சில நேரங்களில் கைது செய்யப்பட்டவர்கள் விவரம் தெரியாமல் அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் வாடும் கொடுமைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு தீர்வுகாணும் விதமாக கடந்த 2008-ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளும் தங்கள் நாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அண்டை நாட்டின் பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பட்டியலை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது.
அதன்படி நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்கள் நாடுகளில் இருக்கும் அண்டை நாட்டு கைதிகளின் பட்டியலை பரிமாறிக்கொண்டன.
அப்போது சிறை தண்டனை முடிந்தும் பாகிஸ்தான் சிறையில் வாடும் 254 இந்திய மீனவர்கள் மற்றும் 3 இந்திய சிவில் கைதிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக்கொண்டது.
மேலும் பாகிஸ்தானின் காவலில் உள்ள இந்தியர்கள் என நம்பப்படும் 12 மீனவர்கள் மற்றும் 14 சிவில் கைதிகளுக்கு உடனடியாக தூதரக அணுகலை வழங்குமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேற்கூறிய தகவல்கள் மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.