பீகாரில் ராகுல்காந்தியின் நியாய யாத்திரையில் நிதிஷ்குமார் பங்கேற்கமாட்டார் என தகவல்
"இந்தியா" கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
பாட்னா,
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ம் தேதியன்று தொடங்கிய இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது.
ராகுல்காந்தியின் யாத்திரையானது நாகாலாந்து, அசாமை கடந்து தற்போது மேற்கு வங்காளத்தில் உள்ளது. இந்த நிலையில், காங்கிரசின் 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' ஜனவரி 29-ம் தேதி பீகார் மாநிலத்தில் நுழையும்போது நிதிஷ் குமார் அதில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல்காந்தி யாத்திரையில் நிதிஷ் குமார் விலகி இருப்பது "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதை மட்டுமே இலக்காக வைத்து, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து "இந்தியா" கூட்டணி உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
"இந்தியா" கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாகவும், பீகார் சட்டசபையை கலைக்க பரிந்துரைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.