மாணவர்களுக்கு அரசியல் சாசனத்தையும், நிர்வாகத்தையும் கற்பியுங்கள்; கல்வி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா அழைப்பு

மாணவர்கள் என்ன படித்தாலும் அவர்களுக்கு அரசியல்சாசனத்தையும், நிர்வாகத்தையும் கற்பியுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா, கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2022-08-06 18:05 GMT

ஐதராபாத்,

'அரசியல் சாசனம் கற்பியுங்கள்'

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் 82-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் சாசனத்தின் கருத்துகள் யாவும், எல்லோருக்கும் புரிகிற விதத்தில் எளிமை ஆக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கு, அவர்கள் என்ன படித்தாலும் அதை பொருட்படுத்தாது, அரசியல் சாசனத்தையும், நிர்வாகத்தின் அடிப்படை கருத்துகளையும் கற்றுத்தர வேண்டும்.

உள்ளூர் கலாசார சின்னங்கள் மற்றும் அடையாளங்களுக்கு, உலகளாவிய கலாசாரம் அச்சுறுத்தலாக உருவாகி வருகிறது. சமூக ஊடகம், தொலைக்காட்சி, 'பாப்' கலாசாரம் ஆகியவை கூட ஒரு விதமான வாழ்க்கை முறைக்கு கவர்ந்து இழுக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக நாம் அவற்றுக்கு கண்மூடித்தனமாக ஈர்க்கப்படுகிறோம்.

எனது பார்வைகளை, உலகமயமாக்கல் மீதான விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

'பாதி மொழிகள் அழியும்'

நாம் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்திருந்தாலும் கூட, நமது சமூகங்கள் செல்வம் மற்றும் வளங்களை நாடுவதில் பெருமளவில் பிளவுபடுகின்றன.

யுனெஸ்கோ-2021 அறிக்கையின்படி, உலகமெங்கும் இன்றைக்கு சுமார் 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் பாதி இந்த நூற்றாண்டின் இறுதியில் மறைந்து விடும் என கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொரு மொழியையும் இழக்கிறபோது, அவற்றின் கணிசமான இலக்கியங்களையும், நாட்டுப்புற கதைகளையும் இழக்கிறோம். அது மட்டுமின்றி, பரம்பரையாக வந்த ஞானமும் பறி போகிறது. உலகமயமாக்கலின் அணிவகுப்பால், மரபியல் பன்முகத்தன்மையிலும் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவாக பயிர் வகைகள் விரைவாக இழக்கப்படுகின்றன. உலக பொருளாதாரத்தின் தேவைகளால் சந்தைகள் இயக்கப்படுகின்றன. இதனால் அதிகமான விவசாயிகள் உள்நாட்டு பயிர்களைத்தாண்டி, குறுகிற கால ஆதாயங்களுக்கு நகர்கின்றனர்.

'கடிதம் எழுதுவதை மறக்காதீர்கள்'

அதேபோன்றுதான், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபடுதல் ஆகியவை காடுகளை பாதிக்கின்றன. இதன் விளைவாக சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படுகிறது.

உலகமயமாக்கலின் மற்றொரு அம்சம், உள்ளுர் கைவினைப்பொருட்கள் மற்றும் கைவினைஞர்களின் மீதும் அதன் தாக்கம் ஏற்படுகிறது என்பதுதான்.

பட்டம் பெறுகிற மாணவர்கள், தெலுங்கு இலக்கியங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்கள் படிப்பதோடு, கடிதம் எழுதுவதை மறந்து விடக்கூடாது. மாணவர்கள் தங்கள் வேர்களை மறந்து விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலைக்கழக வேந்தரும், தெலுங்கானா மாநில கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, பட்டம் பெறுகிற மாணவர்கள் சவால்களை நம்பிக்கையுடன் சந்தியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்