உடுப்பியில், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேட்டி

உடுப்பியில், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-24 14:52 GMT

மங்களூரு;

போதைப்பொருள்

உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி சிர்வா போலீசார் நடத்திய சோதனையில் பெலாப்புவில் உள்ள விநாயநகரைச் சேர்ந்த முஸ்தாப்(வயது 30), அஷ்ரப் (35), அனந்தகிருஷ்ணா நகர் அருகே குட்பாடி கிராமத்தைச் சேர்ந்த இர்ஷாத் கான்(32), சிரிபிடுவு பகுதியை சேர்ந்த ஷர்வீன் (20), சமீத்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் மல்பே போலீசார், போதைப்பொருள் பயன்படுத்தியதாக நெஜாறு சந்திப்பு அருகே வசிக்கும் ரோபன் டி அல்மேடா(21) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் உடுப்பி டவுன் குற்றப்பிரிவு போலீசார் மாதடி கிராமத்தை சேர்ந்த யோகேஷ் கனிகா (25), ஸ்ரேயாஸ் (20) உள்ளிட்டோரை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது.

தீவிர நடவடிக்கை

கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுஇடங்களில் போதைப்பொருள் விற்பனை மற்றும் நடமாட்டத்தை தடுக்கும் நோக்கில் போலீசார் ரோந்து செல்கின்றனர். வரும் நாட்களில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்