நாடாளுமன்ற தேர்தலில் 2 கொள்கைகளுக்கு இடையே தான் மோதல்; ராகுல் காந்தி பேட்டி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 2 கொள்கைகளுக்கு இடையே தான் மோதல் நடைபெறும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.;

Update:2023-07-19 03:09 IST

பெங்களூரு:

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் கூட்டம் சுமுகமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. வேலையின்மை, விலைவாசி உயா்வு ஆகிய விஷயங்களில் பா.ஜனதாவுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். நாங்கள் புதிதாக உருவாக்கியுள்ள இந்தியா-தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் மோடிக்கு இடையே தான் மோதல் நடைபெறும். மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் எங்களின் தத்துவங்கள் அடிப்படையில் கூட்டணியின் கொள்கையை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 2 கொள்கைகளுக்கு இடையே தான் மோதல் ஏற்பட போகிறது. அரசியல் கட்சிகளுக்கு இடையே போர் கிடையாது. மக்களின் குரலை நியாயப்படுத்தும் வகையில் எங்கள் கூட்டணியின் கொள்கை இருக்கும். மும்பை கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் முடிவு செய்யப்படுவார்கள். மணிப்பூர் விவகாரம், வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜனநாயகத்தை காப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-

எல்லா விஷயங்களையும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் நன்றாக நடந்து முடிந்துள்ளது. இது பயனுள்ளதாக அமைந்தது. இன்று முதல் தான் உண்மையான சவால் தொடங்குகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியால் இந்தியா கூட்டணியை எதிர்கொள்ள முடியுமா?. நாங்கள் திட்டங்களில் கவனம் செலுத்துவோம். நாட்டை காப்பது, இந்தியாவை காப்பது தான் எங்களின் முதன்மையான நோக்கம். ஜனநாயகத்தை விற்பனை செய்ய பா.ஜனதா சதி செய்கிறது.வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் தொகுதி பங்கீடு, ஒருங்கிணைப்பு குழு, துணைக்குழுக்கள், குறைந்த பொது செயல் திட்டம் போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். நாங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். இந்தியாவை காக்க நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "பா.ஜனதா ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், தொழில் செய்வோர், ஏழைகள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் துயரத்தில் உள்ளனர். இந்தியாவில் ஜனநாயகம், மக்கள் நலனை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளோம். இதில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார்.

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறுகையில், "மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறோம். சர்வாதிகாரத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியில் வெற்றி பெறுவோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்