போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கேரளாவை சோ்ந்த தொழிலாளி கைது
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கேரளாவை சோ்ந்த தொழிலாளி 10 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்.
மங்களூரு;
கேரளா மாநிலத்தை சோ்ந்தவர் முகமது குன்ஹி (வயது 53). இவரிடம் பாஸ்போர்ட் இல்லை என தெரிகிறது. இதனால் அவர் சட்டவிரோதமாக போலி பாஸ்போா்ட் தயாரித்து வெளிநாடு செல்ல திட்டமிட்டார்.
இதையடுத்து அவர் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி துபாய் செல்வதற்காக மங்களூருவில் உள்ள சா்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரது ஆவணங்களை பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள் அவர் கொடுத்தது போலி பாஸ்போர்ட்டு என்பது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரை பஜ்பே போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வழக்கு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 2012-ம் ஆண்டு ஜாமீனில் வெளியான அவர் தலைமறைவானார். விசாரணைக்கும் ஆஜராகவில்லை. மேலும் அவர் தனது முகவரியை மாற்றி கொண்டே இருந்துள்ளார்.
இவர் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கேரள மாநிலம் ஹரிபுரம் புல்லுருவில் குன்ஹியில் தலைமறைவாக இருந்த முகமது குன்ஹியை கைது செய்தனர்.