சிவமொக்காவில்4 இடங்களில் நூதன முறையில் பல ஆயிரம் ரூபாயை திருடிய கும்பல்

சிவமொக்காவில் ஒரேநாளில் 4 இடங்களில் நூதன முறையில் பல ஆயிரம் ரூபாயை திருடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2023-04-16 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்காவில் ஒரேநாளில் 4 இடங்களில் நூதன முறையில் பல ஆயிரம் ரூபாயை திருடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

4 பேர் கும்பல்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி அருகே ஆனவேரி பகுதியில் கியாஸ் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு வாலிபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்கும்படி கேட்டு 4 பேர் கொண்ட கும்பல் அந்த நிறுவனத்துக்கு வந்தனர். அவர்கள் கேட்டதன்பேரில் அந்த வாலிபரும் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுத்தார். பின்னர் அவர்களிடம் ரூபாய் 500 கேட்டார்.

ஆனால் அவர்கள் ஏற்கனவே 500 ரூபாயை கொடுத்து விட்டதாகவும், அதை நீங்கள் கீழே போட்டிருப்பீர்கள், அல்லது கல்லாப்பெட்டியில் நன்றாக தேடிப்பாருங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள். அதை நம்பிய அந்த வாலிபரும் மேஜையின் கீழும், கல்லாப்பெட்டியிலும் அவர்கள் கொடுத்ததாக கூறிய 500 ரூபாய் நோட்டை தேடிப்பார்த்தார்.

வலைவீச்சு

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த நபர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதேபோல் அந்த மர்ம நபர்கள் மல்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையிலும், சன்னகிரி சாலையில் உள்ள ஒரு பலசரக்கு கடையிலும், பத்ராவதி டவுனில் உள்ள ஒரு கூட்டுறவு சங்க ஏஜெண்டிடமும் நூதன முறையில் கைவரிசை காட்டி பல ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுவிட்டனர்.

இதுபற்றி பணத்தை இழந்த அனைவரும் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் ஆனவேரி, மல்லாபுரா, கைமரா மற்றும் ஹொலேஹொன்னூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்