சிவமொக்கா மாவட்டத்தில் மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
சிவமொக்கா மாவட்டத்தில் மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் செல்வமணி, உத்தரவிட்டுள்ளார்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டத்தில் மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் செல்வமணி, உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் செல்வமணி தலைமையில், அவரது அலுவலகத்தில் நடந்தது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் செல்வமணி பேசியதாவது:-
சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது. இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்ற விரைந்து செயல்பட வேண்டும். அதிகாரிகள் மழை வருவதற்கு முன்பே பொருட்சேதம் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கால்வாய்களில் அடைப்பு
கால்வாய்களில் அடைப்பு ஏற்படாதவாறு தூர்வார வேண்டும். மழைநீர் தங்குதடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். இயற்கை சேதங்களால் ஏற்படும் விளைவுகளை தடுக்க 24 மணி நேரமும் உதவி மையங்களை அமைத்திடுவது அவசியம். திடீர் மழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான மக்களை விரைந்து வெளியேற்றவும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகள் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பது அவசியம். மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு படையினரைக் கொண்டு அப்புறப்படுத்த வேண்டும். வெள்ளத்தால் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கும் மக்களை மீட்க சிறிய படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
உரிய நடவடிக்கை
கால்வாயில் தண்ணீர் சரியாக செல்லவில்லை என்றும், சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகவும் மக்கள் புகார் கூறுகிறார்கள். இதனை மாநகராட்சி என்ஜினீயர்கள், தொழிலாளர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் செல்வமணி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் பீராதார், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி சினேஹல் லோக்கண்டே, மற்றும் வனத்துறை பாதுகாப்பு அதிகாரி சிவசங்கர், மாநகராட்சி என்ஜினீயர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.