நடப்பு 'ரபி' பருவத்துக்கான உர மானியம் ரூ.22,303 கோடி: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

நடப்பு ‘ரபி’ பருவத்தில் ரூ.22 ஆயிரத்து 303 கோடி உர மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-10-25 22:55 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், நடப்பு 'ரபி' பருவத்தில் (கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை) பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை நிர்ணயிக்கும் உரத்துறையின் யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய மந்திரிசபை கூட்டம் முடிவடைந்த பிறகு மத்திய மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் கூறியதாவது:-

'ரபி' பருவத்தில், ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம், நைட்ரஜனுக்கு கிலோவுக்கு ரூ.47 என்றும், பாஸ்பரசுக்கு ரூ.20.82 என்றும், பொட்டாசுக்கு ரூ.2.38 என்றும், சல்பருக்கு ரூ.1.89 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.22,303 கோடி

அந்தவகையில், 'ரபி' பருவத்தில், பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மானியமாக ரூ.22 ஆயிரத்து 303 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 'காரிப்' பருவத்தில் உர மானியமாக ரூ.38 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. சர்வதேச அளவில் விலை உயர்ந்தபோதிலும், மானியம் கொடுத்து பழைய விலைக்கே விவசாயிகளுக்கு உரம் கிடைக்கச்செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

பழைய விலை

அதன்படி, டி.ஏ.பி. உரம், 50 கிலோ மூட்டை ரூ.1,350 என்ற பழைய விலைக்கே கிடைக்கும். என்.பி.கே. உரமும் மூட்டைக்கு ரூ.1,470 என்ற பழைய விலைக்கே கிடைக்கும்.

எஸ்.எஸ்.பி. (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்) உரத்தின் விலை மூட்டைக்கு சுமார் ரூ.500 ஆக இருக்கும். எம்.ஓ.பி. உரத்தின் விலை ரூ.1,700-ல் இருந்து ரூ.1,655 ஆக குறையும்.

விவசாயிகளுக்கு போதிய உரங்கள், நியாயமான விலையில் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். கடந்த நிதிஆண்டில், உர மானியமாக ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் கோடி செலவானது என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்