மங்களூருவில் கொலை, கொள்ளையில் தொடர்புடைய 8 பேர் கைது

மங்களூருவில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் தொடர்புடையதாக பிரபல ரவுடி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் கூறியுள்ளார்.

Update: 2023-03-16 06:45 GMT

மங்களூரு-

மங்களூருவில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் தொடர்புடையதாக பிரபல ரவுடி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் கூறியுள்ளார்.

குற்றச்செயல்களில் தொடர்பு

மங்களூரு புறநகர் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு பஸ் டிரைவர் பிரசன்னா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து மங்களூரு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பிரபல ரவுடியான ராஜா (வயது 36) மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தவிர மேலும் சில வழிப்பறி, கொள்ளை, கொலை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருந்தது. இதையடுத்து மங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

8 பேர் கைது

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் கூறியதாவது:-

2013-ம் ஆண்டு மங்களூரு புறநகர் பகுதியில் நடந்த கொலை வழக்கு ,வழிப்பறி, கொள்ளை, மற்றும் தாக்குதல் வழக்குகள் தொடர்பாக பிரபல ரவுடி ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். அதன்படி போலீசார் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளாக கன்னூரை சேர்ந்த பிரகாஷ் ஷெட்டி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நிஷார் உசேன், கஸ்பாவை சேர்ந்த அப்துல் சபீர், அஜ்யூத், ரிஸ்வான் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

இவர்களில் ராஜா மீது பர்க்கி, கங்கனாடி ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதேபோல நிஷார் உசேன் மீது பர்க்கி, சூரத்கல், முல்கி, புத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. அப்துல் சபீர் மீது பனம்பூர், மங்களூரு தெற்கு, கிழக்கு, கங்கனாடி, பாஜ்பே, உப்பினங்கடி ஆகிய போலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவாகியுள்ளது.

போலி ஆதார் கார்டு....

இவர்கள் அனைவரும் ெபங்களூருவில் போலி ஆதார் கார்டு தயாரித்து, அதன் மூலம் சிம்கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தனர். மேலும் போலி முகவரிகளை கொடுத்து வாடகைக்கு வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்