மங்களூருவில், இருவேறு இடங்களில் போலீசாரை தாக்கிய 2 பேர் கைது

மங்களூருவில், இருவேறு இடங்களில் போலீசாரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-10 15:02 GMT

மங்களூரு;

போலீசார் மீது தாக்குதல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ஆடியப்பாடி மொண்டிபையலுவை சேர்ந்தவர் அசார் என்ற முகமது அசாருதீன்(வயது 31).இவர் மீது பஜ்பே, கார்கலா டவுன் போலீஸ் நிலையங்களில் மாடு கடத்தல் வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளில் அசாருதீனை கைது செய்ய பஜ்பே போலீசார் அவரின் வீட்டிற்குச் சென்றனர்.

அப்போது அசாருதீன், போலீசாரை தன்னை கைது செய்ய விடாமல் தடுத்துள்ளார். மேலும் அவர், போலீசாரை தாக்கியுள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். ஆனாலும் போலீசார், அசாருதீனை கைது செய்து அழைத்து சென்றனர்.

இதேபோல் மங்களூரு அருகே மங்களாதேவியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத் பூஜாரி (48) என்பவர் மது அருந்திவிட்டு குடிபோதையில், ராவ் அண்ட் ராவ் சர்க்கிள் அருகே பொதுமக்களிடம் தகராறு செய்து போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்துள்ளார்.

குடிபோதையில்...

இதுபற்றி தகவல் அறிந்த பந்தர் போலீசார் விரைந்து சென்று வினோத் பூஜாரியை கைது செய்ய முயன்றனர். அப்போது வினோத் பூஜாரி, போலீசாரை தாக்கியுள்ளார். ஆனாலும் போலீசார், வினோத் பூஜாரியை கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்த இருவேறு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தாக்குதலில் காயமடைந்த போலீசார், ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்