பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) இடையே போட்டா போட்டி

பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-11 18:45 GMT

பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் தேவனஹள்ளி, ஒசக்கோட்டை,  தொட்டபள்ளாப்பூர், நெலமங்களா ஆகிய 4 தொகுதிகளில் உள்ளன. இதில் தலா 2 இடங்களை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கைப்பற்றி   உள்ளன. எனவே இந்த முறை இங்கு கூடுதல் இடங்களை கைப்பற்ற  இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

தேவனஹள்ளி-ஒசக்கோட்டை

தேவனஹள்ளி தொகுதியில் கடந்த முறை ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரே மீண்டும் அந்த கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதா சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ.சந்திரன்னா, பி.ஆர்.நாராயணசாமி ஆகியோர் டிக்கெட் கேட்டு வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒசக்கோட்டை தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் எம்.டி.பி.நாகராஜ். அவர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். அத்துடன் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் 2019-ம் ஆண்டு ஒசக்கோட்டை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் களமிறங்கிய எம்.டி.பி.நாகராஜ், சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடாவிடம் தோல்வியை தழுவினார். சரத் பச்சேகவுடா 2018-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.டி.பி.நாகராஜிடம் தோல்வி அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் காங்கிரசில் இணைந்து விட்டதால், ஒசக்கோட்டை ெதாகுதி வேட்பாளராக சரத் பச்சேகவுடாவை அக்கட்சி அறிவித்துள்ளது. எம்.டி.பி.நாகராஜ் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்து விட்டார். ஆனால் அவர் தனது மகனுக்கு பா.ஜனதாவில் டிக்கெட் கேட்டு வருகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு இங்கு போதிய மக்கள் செல்வாக்கு இல்லாததால் அந்த கட்சி வலுவான வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகிறது.

தொட்டபள்ளாப்பூர்-நெலமங்களா

தொட்டபள்ளாப்பூர் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் வெங்கடரமணய்யா. இவருக்கு மீண்டும் காங்கிரஸ் சார்பில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் முன்னாள்  மத்திய மந்திரி ஜாலப்பாவின் மகன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நரசிம்மசாமி ஆகியோர் காய் நகர்த்தி வருகின்றனர். இங்கு கடந்த முறை தோல்வி அடைந்த முனேகவுடாவுக்கு ஜனதாதளம்(எஸ்) மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.  நெலமங்களா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் வேட்பாளராக நின்று எல்.எல்.ஏ.வாக தேர்வானவர் சீனிவாச மூர்த்தி. இவர் மீண்டும் இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில் சீனிவாசய்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜை வேட்பாளராக நிறுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரு புறநகர் மாவட்டத்தை பொறுத்தவரை பா.ஜனதா சற்று பலவீனமாக உள்ளது. இதனால், இங்கு ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் இடையே தான் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு இருமுனை போட்டியே நிலவும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்