குடகில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கலெக்டர் பேச்சு

குடகு மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-12 18:45 GMT

குடகு-

குடகு மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடராஜா தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

குடகு மாவட்ட புதிய கலெக்டராக வெங்கடராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பொறுப்பை ஏற்று கொண்டார். இந்த நிலையில் கலெக்டர் வெங்கடராஜா நேற்று முன்தினம் மடிகேரியில் உள்ள தனது அலுவலகத்தில் சுற்றுலா துறை அதிகாரிகள், ஓட்டல் மற்றும் ரெசார்ட் உரிமையாளர்கள், ஹோம் ஸ்டே உரிமையாளர்கள், வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு ராமராஜனும் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், குடகு மாவட்டத்திற்கு வார இறுதி நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுலா மற்றும் கலால் வரி மூலம் மாவட்டத்திற்கு அதிக வருவாய் கிடைப்பதாகவும், இதனால் சுற்றுலா தலங்களில் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு

இதையடுத்து கலெக்டர் வெங்கடராஜா பேசியதாவது:-

குடகு மாவட்டத்தில் துபாரே, பாரேபோல், குமரள்ளி, மண்டல்வர்த்தி, அப்பி அருவி, ராஜாசீட் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு குடகிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு எந்த கசப்பான அனுபவம் ஏற்படாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்.

சுற்றுலா வரும் பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டால் குடகு மாவட்டத்துக்கு கெட்ட பெயர் ஏற்படும். இதனால் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை குறையும். எனவே சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளிடம் கண்ணியமாகவும், பணிவாகவும் நடந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும். குடகு மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

தூய்மைக்கு முன்னுரிமை

ரப்பர் படகில் சாகச விளையாட்டு (ரிவர் ராப்டிங்) நடத்துவது தொடர்பாக உரிமம் வாங்குதல், உரிமம் புதுப்பித்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் விதிகளின்படி செய்யப்படும். ரப்பர் படகில் சாகச விளையாட்டு நடத்த அனுமதி பெற்றவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். விதியை மீறக்கூடாது. ரப்பர் படகில் சாகச விளையாட்டுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்க வேண்டும். ரப்பர் படகில் சாகச விளையாட்டு மற்றும் சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு, குடிநீர், கழிவறை, வாகன நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகள் அவசியம் இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சுற்றுலா துறை மேற்கொள்ள வேண்டும். குடகு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 'ஹோம் ஸ்டே' மற்றும் ரெசார்ட்களில் தகவல்களை இணையதளத்தில் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும், தேவையான இடங்களில் சுற்றுலா தகவல் மையங்கள் திறக்கப்பட வேண்டும். சுற்றுலா தலங்களில் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கண்ட இடங்களில் குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடும் நடவடிக்கை

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் கூறுகையில், அபிஜல்பாதா அருகே சுற்றுலா பயணிகளிடம் அண்மை காலமாக அத்துமீறல் நடப்பதாக சர்வதேச அளவில் செய்தி வெளியாகி உள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது. அவ்வாறு நடந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எந்தவிதமான தவறான செயல்களும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

ரவுடிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் போதைப்பொருள் கட்டுப்படுத்துவது தொடர்பாக கூடுதல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கீகரிக்கப்படாத ரெசார்ட்கள் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளது. அந்த ரெசார்ட்டுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் 112 என உதவி எண்ணுக்கு தொடர்புகொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்