அடுத்த கல்வி ஆண்டு முதல் கர்நாடகத்தில் அங்கன்வாடி மையங்களில் தேசிய கல்வி கொள்கை அமல்; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

கர்நாடகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.;

Update:2022-08-26 01:49 IST
அடுத்த கல்வி ஆண்டு முதல் கர்நாடகத்தில் அங்கன்வாடி மையங்களில் தேசிய கல்வி கொள்கை அமல்; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

பெங்களூரு:

பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தேசிய கல்வி கொள்கை

நாட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். அதற்காகவே மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது. இந்த கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் கர்நாடகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. கர்நாடகத்தில் ஏற்கனவே கல்லூரி மற்றும் பள்ளி கல்வித்துறையில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக அடுத்த கல்வி ஆண்டு (2023-24) முதல் அங்கன்வாடி மையங்கள், மழலையர் பள்ளிகளிலும் தேசிய கல்வி கொள்கை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கர்நாடக அரசு 6 குழுக்களை அமைத்துள்ளது. பாடத்திட்டம் வகுத்தல், கற்பித்தல், கற்றலுக்கான உபகரணங்கள், மதிப்பீடு செய்தல், திறனை மேம்படுத்துதல், சமுதாயத்தை சென்றடைதல் உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனைகள் வழங்க அந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மத்திய அரசு அடுத்த மாதம் பாடத்திட்டத்தை அனுப்பி வைக்க உள்ளது.

உரிய பயிற்சி

அதன் பிறகு கர்நாடகத்தில் அதற்கான பாடத்திட்டத்தை இறுதி செய்வோம். அதன் பிறகு அங்கன்வாடி ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். கர்நாடகத்தில் 66 ஆயிரத்து 361 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அவர்களில் 732 பேர் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளனர். 6 ஆயிரத்து 17 பேர் பட்டப்படிப்பும், 14 ஆயிரத்து 303 பேர் பி.யூ.சி.யும், 40 ஆயிரத்து 786 பேர் எஸ்.எஸ்.எல்.சி.யும் படித்துள்ளனர்.

14 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப 3 விதமான பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பயிற்சி அளிக்கும் பணி முடிக்கப்படும். அங்கன்வாடி மையங்களிலை் ஊட்டச்சத்து உணவு, சுகாதார சேவை மற்றும் கல்வி வழங்கப்படுகிறது.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்