ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேச உள்ளதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்முவை ராஷ்டிரபத்னி எனக்கூறியதாக சர்ச்சையில் சிக்கிய மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தான் திட்டமிட்டு ஜனாதிபதியை அவ்வாறு குறிப்பிடவில்லை. வாய்தவறி கூறிவிட்டதாக விளக்கம் அளித்து இருந்தார். எனினும், இந்த விளக்கத்தை ஏற்க பாஜக மறுத்துள்ளது.
இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "நான் எனது தவறை ஒப்புக்கொள்கிறேன். அதேவேளையில் சோனியா காந்தி குறித்து அவர்கள் (பாஜக) என்ன கூறினார்கள்? சசி தரூர் மனைவி பற்றி என்ன சொன்னார்கள்? ரேணுகா சவுத்ரி பற்றி என்ன சொன்னார்கள்? நான் ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நாளை மறுநாள் சந்திக்க நேரம் கிடைக்கும் என நினைக்கிறேன். இந்த சர்ச்சை குறித்து தனிப்பட்ட முறையில் நான் அவரிடம் பேசுவேன்" என்றார்.