இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் முன்னுரிமைகளை பற்றி பிரதமர் கிஷிடாவிடம் விரிவாக பேசியுள்ளேன்: பிரதமர் மோடி

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் முன்னுரிமை விசயங்களை பற்றி பிரதமர் கிஷிடாவிடம் விரிவாக பேசியுள்ளேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2023-03-20 08:26 GMT



புதுடெல்லி,


ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியாவில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக, டெல்லியில் விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கிய கிஷிடாவை, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் முறைப்படி வரவேற்றார்.

இந்த வருகையின்போது, டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின், இந்திய பயணத்திற்கான வருகை பதிவேட்டிலும் கையெழுத்திட்டார்.

இந்த பயணம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கிஷிடா, சர்வதேச சமூகத்தில் ஜப்பானும், இந்தியாவும் எந்த வகையில் பங்காற்ற வேண்டும் என்பது பற்றிய கேள்விக்கு பிரதமர் மோடியுடன் சேர்ந்து, ஒரு முழுமையான அளவிலான பார்வைகளை பரிமாறி கொள்ளும் பணியில் ஈடுபட ஆவலாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன.

குறிப்பாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியம் திட்டம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியாவும், ஜி-7 தலைமை பொறுப்பை ஜப்பானும் ஏற்றுள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இருவரும், இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்ட குழுவினர் அடங்கிய கூட்டத்தில் நேரடி ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசும்போது, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். கடந்த ஓராண்டில் நாங்கள் இருவரும் பல்வேறு முறை சந்தித்து இருக்கிறோம். ஒவ்வொரு முறையும், இந்தியா-ஜப்பான் இருதரப்பு உறவுக்கான, அவரின் நேர்மறையான அணுகுமுறை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை நான் உணர்ந்து இருக்கிறேன்.

இந்த தருணத்தில், இருதரப்பு உறவை மேம்படுத்த அவரது இன்றைய பயணம் உதவும். அதனாலேயே, நாங்கள் இந்த திட்ட தொடக்கத்தில் ஈடுபட்டு உள்ளோம். இந்தியா-ஜப்பான் நாடுகளின் சிறப்பு செயல்திட்டம் மற்றும் உலகளாவிய நல்லுறவு ஆனது, நம்முடைய பரஸ்பர ஜனநாயக மாண்புகள் மற்றும் சர்வதேச தளங்களில் சட்ட விதிகளுக்கான மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இன்றைய சந்திப்பில் பிரதமர் கிஷிடாவிடம், இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் முன்னுரிமை விசயங்களை பற்றி விரிவாக பேசியுள்ளேன். நம்முடைய ஜி-20 தலைமைத்துவத்தின் முக்கிய அடித்தளம் ஆனது, உலகளாவிய தெற்கு பிராந்தியபகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து குரலெழுப்புவது ஆகும். வாசுதேவ குடும்பகம் என்பதில் நம்பிக்கை கொண்ட, ஒவ்வொருவரையும் ஒன்றாக சேர்த்து கொண்டு வந்து முன்னேறி செல்லுதல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒரு கலாசாரத்தில் முன்னே பயணிக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்