வயிறு பாதிப்பால் டெல்லிக்கு இன்று நான் போகவில்லை: பல்டி அடித்த டி.கே. சிவக்குமார்

டெல்லிக்கு செல்வேன் என பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின் முதலில் கூறிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் பின்பு, வயிறு பாதிப்பால் நான் போகவில்லை என கூறியுள்ளார்.

Update: 2023-05-15 14:53 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆட்சியமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டு இறுதி அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி உள்ளது. அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்க உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா டெல்லிக்கு இன்று மதியம் புறப்பட்டு சென்றார். அவர் இன்றிரவு டெல்லியை சென்றடைந்து உள்ளார்.

இந்த சூழலில், டி.கே. சிவக்குமார் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவர் பெங்களூருவில் உள்ள ஷாங்ரி-லா ஓட்டலில் காங்கிரசார் நியமித்த கண்காணிப்பு குழுவினரை சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் என்ன பணியை செய்ய வேண்டுமோ, அந்த பணியை செய்து விட்டேன். என்னை டெல்லிக்கு அழைப்பது பற்றி கட்சியின் உயர்மட்டம் கூடி முடிவு செய்ய வேண்டும்.

நாங்கள் ஒரு-வரி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். கட்சியின் தலைமைக்கு முடிவை விட்டு விடுவது என்பதே அது. டெல்லிக்கு போவது பற்றி நான் முடிவு செய்யவில்லை என முதலில் கூறினார். இந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின்னர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து சிவக்குமார் பேசும்போது, இன்று எனது பிறந்த நாள் ஆகும். எனது குடும்பத்தினரை நான் சந்திப்பேன். அதன்பின்னர், டெல்லிக்கு செல்வேன்.

முதல்-மந்திரியை நியமிக்கும் விவகாரம் கட்சியின் உயர்மட்டத்திற்கு விடப்பட்டு உள்ளது. எனது இலக்கு, கர்நாடக மக்களிடம் விசயங்களை கொண்டு சேர்ப்பது. நான் அதனை செய்து விட்டேன். காங்கிரஸ் மேலிடம், என்னையும், சித்தராமையாவையும் டெல்லி வரும்படி அழைத்து உள்ளது.

சோனியா காந்தி மற்றும் கார்கே எனக்கு தலைவர் பதவியை வழங்கினார்கள். எனது தலைமையிலேயே 135 சீட்டுகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. எப்போது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களை விட்டு போனார்களோ, எங்களது ஆட்சியை நாங்கள் இழந்தோமோ, அப்போது, நான் நம்பிக்கையை இழக்கவில்லை என கூறியுள்ளார். (கடந்த 2019-ம் ஆண்டு காங்கரஸ் மற்றும் ம.ஜ.த. கூட்டணி கட்சி ஆட்சியை பற்றி அவர் குறிப்பிட்டு உள்ளார்).

கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்களை வெளியிட நான் விரும்பவில்லை. நான் ஒரு தனிமனிதன். எனக்கு ஒரு விசயத்தில் நம்பிக்கை உள்ளது. ஒரு தனிமனிதன் தைரியத்துடன் இருந்து மெஜாரிட்டியை பெற முடியும். எல்லா எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு போனபோது, நான் மனம் தளரவில்லை என கூறியுள்ளார். இதனால், கர்நாடக முதல்-மந்திரிக்கான போட்டியில் சிவக்குமாரும் இருக்கிறார் என்று தெளிவுப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில், இரவு 7 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவக்குமார் கூறும்போது, எனக்கு வயிறு பாதிப்பு உள்ளது. அதனால் டெல்லிக்கு நான் இன்று பயணம் செய்ய முடியாது என கூறியுள்ளார். இதன்பின்னர் அவர், 135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால், என்னிடம் எந்த எம்.எல்.ஏ.க்களும் இல்லை. முதல்-மந்திரி முடிவை கட்சியின் மேலிடத்திடம் விட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.

அவர், பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின்னர், வயிறு பாதிப்பு ஏற்படும் அளவுக்கு என்ன ஆனது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் இன்று போகவில்லை என்றால், வேறு நாளில் டெல்லி செல்ல உள்ளாரா? அல்லது அந்த முடிவை கைவிட்டு விட்டாரா? என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவில்லை. எனினும், தனது முடிவை அவர் மாற்றி, மாற்றி கூறியுள்ளது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்